கரண்ட் பில் கட்டவில்லை என வந்த மெசேஜ்.. வங்கியில் இருந்து காணாமல் போன ரூ.9 லட்சம்.. உஷாராக இருங்க மக்களே..!
மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி 8 லட்சத்து 80 ஆயிரம் ஏமாற்றிய கும்பல். சென்னையில் பரபரப்பு
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ரோமி பைநாடன் (52). இவர் மத்திய அரசு பணியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி நூதன முறையில் பல லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இவர் கடந்த 22 ஆம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து என்னுடைய செல்போனுக்கு வந்த SMS ஒன்றில் மின்சார பில் கட்டவில்லை என்றும், பணம் செலுத்தவில்லை என்றால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க இந்த செல்போன் நம்பரை தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் நானும் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்முனையில் பேசியவர், தன்னை மின்வாரிய அதிகாரி (JE) என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பலவிதமாக பணம் செலுத்த வேண்டும் என சில முறைகளை என்னிடம் தெரிவித்தார். ஆனால் அது குழப்பம் வண்ணமாக இருந்தது. இதனை அடுத்து பணத்தை செலுத்த நானே தங்களுக்கு உதவி செய்கிறேன் என தெரிவித்தார்.
என்னுடைய செல்போனில் TEAM VIEWER என்ற செயலியை பதிவிறக்கம் செய்யும்படி தெரிவித்தார். அதன்பேரில் நானும் அந்தச் செயலியை என்னுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்தேன். அதன்பிறகு என்னுடைய செல்போன், சிறிது நேரம் பயன்படுத்த முடியாதளவுக்கு ஹேங்க் ஆனது. அதன்பிறகு செல்போனுக்கு வந்த SMS இல் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 8,80,000 ரூபாய் மூன்று தடவையாக எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடுத்து உடனடியாக எனது வங்கிக்கு தொடர்பு கொண்டு என் வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருப்பது குறித்து தகவல் தெரிவித்தேன்.
சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட பொழுது அந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. தொடர்ந்து முயற்சித்த போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்ததால் மர்ம கும்ப கும்பல் என்னை ஏமாற்றியது என்பதை உணர்ந்தேன். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு பணத்தையும் மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து சைபர் க்ரைம் போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. சென்னை அண்ணாநகர் சைபர் க்ரைம் பிரிவு விசாரணையை துரிதப்படுத்தினர். வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் ரேசர் பே வால்ட் (wallet), பிபிசிஎல் வால்ட் (wallet) என இரண்டு வழியாக பணம் அனுப்பப்பட்டிருந்து தெரியவந்தது. பைநாடனின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் கடந்த 12.7.2022-ம் தேதி மீண்டும் அவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட மர்ம கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் அந்த கும்பலை தேடி வருகின்றனர். இதேபோன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் பணத்தை, மர்ம நபர்கள் வங்கியில் இருந்து எடுத்த பொழுது அதை செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உஷாராக இருங்க மக்களே
பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருப்பதோடு, எந்த ஒரு நபருக்கும் பணம் அனுப்பும் முன் அவரது உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று Mobile No, Account No, OTP, Debit Card, Cvv போன்ற எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் எனவும், உடனடி புகார்கள் மற்றும் நிதி இழப்புக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டும், இணைய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்