மேலும் அறிய
பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி அதிமுக - பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகிகள்
தொடர்ந்து அதிமுக கட்சியில் பாரதிய ஜனதா கட்சியுடைய நிர்வாகிகள் இணைந்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்
அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததிலிருந்து, தொடர்ந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் பாஜகவிற்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சபட்சமாக, பாரதி ஜனதா கட்சியின் ஐடி வின் பிரிவு மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தொடரும் பனிப்போர்
இதனை அடுத்து பாஜக தலைவர்கள் அதிமுகவிற்கு எதிராக கருத்து கூறுவதும், அதிமுகவினர் பாஜகவிற்கு எதிராக கருத்து கூறுவதும் என அந்த கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபோக தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாஜகவிற்கு மற்றொரு அதிர்ச்சி
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் சின்னையா, அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த நிர்வாகிகளை அதிமுகவினர் வரவேற்றனர்.

பாஜகவினர் அடுத்தடுத்து அதிமுகவிற்கு செல்வது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பலர் இணைவார்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், செங்கல்பட்டு அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் முன்னிலையில் பலர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விளங்கி அதிமுகவில் இணைந்தனர்.
" பலர் அதிமுகவில் இணைவார்கள்"
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கங்காதேவி, பாஜக தலைமை மீதான அதிருப்தி காரணமாகவும், கட்சிக்காக உழைக்கும் பெண்களுக்கு பாஜகவில் உரிய மரியாதை இல்லாத காரணத்தினாலும், அக்கட்சியில் இருந்து வெளியேறி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பெண்களை மதிக்கக்கூடிய கட்சியாக அதிமுக இருப்பதாகவும், பாஜகவில் இருந்து இன்னும் பலர் அதிமுகவில் இணைய ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அண்ணாமலை ஏற்கனவே அதிமுக மீது ஆத்திரத்தில் இருக்கும் நிலையில், மீண்டும் பாஜகவினர் அதிமுகவில் இணைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















