Pallavan Illam: “அன்று ஆதரவு; இன்று முதல்வர் ஆகியும் நடவடிக்கை இல்லை” - தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளத்தினர் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளத்தினர் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி ஓய்வு பெற்ற , விருப்ப ஓய்வு , மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கான ஓய்வுகால பலன்கள் வழங்குதல் , ஒப்பந்த நிலுவைத் தொகை ,கொரோனா நிதி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
500க்கும் மேற்பட்ட சி ஐ டி யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.
சி ஐ டி யு மாநில செயலாளர் ஆறுமுக நயினார் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் பணி புரியும் 1.20 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் 85 ஆயிரம் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்தத்தின்படி 7 மாத கால ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்குதல், ஒப்பந்தப்படி கொரோனா காலத்தில் பணிபுரிந்த அவர்களுக்கு சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்குதல், உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார்
”தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் அரசுக்கு மிகப்பெரிய சேவை செய்து வருகிறது தொழிலாளர்களுடைய பணத்தை அரசாங்கம் செலவு செய்து அவர்களுக்கு தரவேண்டிய ஊதியங்களை ஒழுங்காக வழங்கவில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய 1600 கோடி ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் என்பது தற்போது வரையிலும் நிலுவையில் இருப்பதாகவும், இதுகுறித்து அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் பொழுது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க ஸ்டாலின் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார். ஆட்சிக்கு வந்தால் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியதை இதுவரை செய்து தரவில்லை. நாங்கள் முதலமைச்சரை சந்தித்தபோது உடனடியாக வழங்குவதாக அன்றைக்கு முதலமைச்சர் கூறியதாக அமைச்சரும் செயலாளரும் கூறினார்கள். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்” என தெரிவித்தார்.
அதன் பின் போராட்டக்காரர்கள் திடீரென பல்லவன் இல்லத்தை முற்றுகையிட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
ஆனால் போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடையை மீறி தடுப்பு வேலிகளை மீறி உள்ளே நுழைய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரும் போராட்டகாரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்