தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. சீறிப்பாயும் கூடுதல் ரயில்கள்.. மிச்சமாக போகும் 30 நிமிடம்
Chennai Kanyakumari Double Track: சென்னை - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில், விரைவு ரயில்களின் பயணம் நேரம் 30 நிமிடம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு, செல்பவர்களுக்கும் ரயில் பயணம் மிக முக்கிய பயணமாக இருந்து வருகிறது.
சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம்
தமிழ்நாட்டின் கனவு திட்டமாக சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம் இருந்து வருகிறது. 1998 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இரட்டை ரயில் பாதை திட்டம் மதுரை வரை கடந்த 2021 முடிக்கப்பட்டு ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
இதனால் ரயிலில் பயணம் செய்பவர்களின் நேரம் குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மதுரை -திருநெல்வேலி - நாகர்கோயில் கன்னியாகுமரி இடையே, இரட்டைப் பாதை அமைக்கும் பணி கடந்தாண்டு இறுதியில் முழுமையாக முடிக்கப்பட்டன. இதனால் தென்மாவட்ட விரைவு ரயில்களின் தாமதம் குறைக்கப்பட்டுள்ளது.
பயண நேர குறைப்பு
இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகும் கூட இதுவரை கூடுதல் ரயில்கள் எதுவும் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. அதேபோன்று பயண நேர குறைப்பு போன்ற அறிவிப்புகளும் இதுவரை தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்படாமல் இருப்பது பயணிகளுக்கு, சிரமத்தை கொடுத்து வருகிறது. இந்தநிலையில் தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை தயாரிப்பு பணியில் துவங்கி இருப்பதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்த போது : கூடுதல் ரயில்கள் இயக்கம் மற்றும் ரயில்கள் கூடுதல் நிறுத்தம் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் தேவையைப் பொறுத்து, புதிய கால அட்டவணை அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மேலும் கூறுகையில், தென் மாவட்ட இரட்டை பாதையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் வேகம் சற்று அதிகரிக்கப்படும். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் புதிய கால அட்டவணையில் இது குறித்தும் பரிசளிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்டத்திற்கு செல்பவர்களின் பயணம் நேரம், 30 நிமிடம் வரை குறைய வாய்ப்புள்ளது. புதிய அட்டவணை ஜூலையில் வெளியாக வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





















