LIC Fire Accident: சென்னை எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறை..!
சென்னை, அண்ணாசாலையில் எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் எப்போதும் பரப்பாக காணப்படும் முக்கிய இடங்களில் அண்ணாசாலையும் ஒன்று. இந்த சாலையில் எல்.ஐ.சி. கட்டிடம் அமைந்துள்ளது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுவது இந்த எல்.ஐ.சி. கட்டிடம் ஆகும். இந்த நிலையில், விடுமுறை நாளான இன்று (ஏப்ரல்,02-ஞாயிறு) எல்.ஐ.சி. கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து
எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேல்தளத்தில் இருந்த பெயர் பலகையில் தீவிபத்து ஏற்பட்டது. பின்னர், தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைப் பார்த்த ஊழியர்கள், இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். முதற்கட்ட விசாரணையில் பெயர் பலகையில் உள்ள மின் விளக்கில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையின் அடையாளம் எல்.ஐ.சி.!
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ’லைஃப் இன்சுரன்ஸ் இந்தியா’ என்ற அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனத்தின் மாநில தலைமை அலுவலகம். எல்.ஐ.சி. கட்டிடம் 1959-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது.
இது 1960 காலகட்டத்தில் இந்தியாவின் உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டது. 70 ஆண்டுகளை கடந்தும் கம்பிரமாக நிற்கும் இந்தக் கட்டடம், சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.
எல்.ஐ.சி.-யில் தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநர் விஜய சேகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:
15 தளங்களைக் கொண்ட எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சற்றுநேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சமபவம் தொடர்பாக விஜய சேகர் தெரிவிக்கையில், “ உயர்ந்த மாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளின்போது, தீயை அணைக்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் ஸ்கைலைட் வாகனம் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். இது சென்னையில் மூன்று வாகனம் இருக்கிறது. மீட்பு அழைப்புகளில் போது, உயர்ந்த மாடிகளில் ஏற்படும் விபத்துகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஸ்கைட் மீட்பு பணி வாகனம், 54 மீ, அதாவது 172 அடி உயரம் கொண்டது. மாடிகளில் மீட்பு பணிகளின்போது இது மிகவும் உதவுகிறது. 104 மீட்டர் வாகனங்கள் இரண்டு தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில்தான் ஸ்கைட் வாகனங்களை வாங்கியிருக்கிறோம் என்று தெரிவித்தார். அதோடு, அடுத்தகட்டமாக, இன்னும் மூன்று வாகனங்கள் வாங்க திட்டமிட்டிருக்கிறோம்.அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எல்.ஐ.சி. -கட்டிடம் பாதிக்கப்பட்டுள்ளதா?
தீ விபத்தில் கட்டிடத்திற்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநர் விஜய சேகர், 3 நிமிடங்களில் தீயை அணைத்துவிட்டோம். எல்.ஐ.சி. கட்டிடத்தில் எவ்வித பாதிப்புகளும் இல்லை.” என்று தெரிவித்தார்.
மேலும், எல்.ஐ.சி.-யில் தீயணைப்பு பாதிப்பு பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் பராமரிப்பு குறித்து அடிக்கடி ஆய்வு செய்து வருவதாகவும், உயர கட்டிடங்களில் தீயணைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். ஆண்டுக்கு 2 முறை எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எல்லாம் சரியாக பின்பற்றப்படுவதாக மாவட்ட அலுவலர் அறிக்கை கொடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.