Smart Parking: சென்னைக்கு வருகிறது 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம்.. இனி தப்ப முடியாது.. முன் பதிவு செய்து பார்க்கிங்..!
Chennai Smart Parking: சென்னை முக்கிய இடங்களில் சாலையோர ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. பார்க்கிங் கட்டணமாக 1 மணி நேரத்திற்கு 20 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வசூலிக்கப்பட உள்ளது.

சென்னையில் வாகனம் நிறுத்துவது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பல இடங்களில் 'நோ பார்க்கிங்' என்ற பெயரில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என சட்டம் இருக்கிறது. இட நெருக்கடி காரணமாக வாகன நிறுத்த முடியாமல், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகனம் நிறுத்தங்களை, ஒழுங்குபடுத்தும் வகையில் மெரினா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோர வாகன நிறுத்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சாலையோர வாகன நிறுத்த திட்டம்
சாலையோர வாகன நிறுத்த திட்டம் தனியார் நிறுவனங்கள் மூலம் டெண்டர் விடப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. 1 மணி நேரத்திற்கு கனரக வாகனங்களை நிறுத்த 40 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20, இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அனுமதித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் கழகம் சார்பில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஸ்மார்ட் பார்க்கிங் - ( Smart Parking)
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து ' ஸ்மார்ட் பார்க்கிங் ' ( Smart Parking) திட்டத்தை செயல்படுத்த உள்ளது. குறிப்பாக அண்ணா நகர் பகுதியில் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அண்ணா நகரில் உள்ள 25 கிலோமீட்டர் நீல சாலைகளில், சுமார் 2000 4 சக்கர வாகனங்கள் உட்பட 5000 வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
நெரிசல் நிறைந்த நேரத்தில் 3000 வாகனங்களை நிறுத்த முடியும். அதுவே நெரிசல் குறைந்த நேரங்களில் 5000 வாகனங்கள் வரை நிறுத்த வசதிகள் உள்ளது. குறிப்பாக அண்ணாநகர் இரண்டாவது, மூன்றாவது , ஆறாவது அவனுசாலைகள் உள்ளன.
கட்டண விவரம் என்ன ? - GCC SMART PARKING FEES
இப்பகுதியில் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை ஒவ்வொரு நாளும், முதல் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படாது. பத்து நிமிடங்களுக்கு மேல் வாகனங்கள் நிறுத்தப்பட்டால்,ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
கனரக வாகனங்களுக்கு 60 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து 20 மீட்டர் மற்றும் பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் வசூலிக்கப்படும் நேரம் என்ன ?
இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இரவு 11 மணி முதல் காலை 9 மணி வரை நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.
பாதுகாப்பு வசதிகள் என்ன ?
வாகனங்கள் நிறுத்த இடங்களில் சுமார் 1200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த வாகனங்களை கண்காணிக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மொபைல் செயலி
வாகன நிறுத்த கட்டண திட்டத்திற்கு மொபைல் செயலி உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்தை முன்கூட்டியே பதிவு செய்து கட்டணமும் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக வருபவர்கள் க்யூ.ஆர் மூலமாக வாகனங்களை நிறுத்தலாம். இதற்கான ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்த திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டத்தை வகுத்து வருகிறது. சாலையோர போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் செலுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும் ?
வாகன நிறுத்தத்தில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு, 3 மணி நேரத்துக்கு மேலாக கட்டணம் செலுத்தாமல் இருந்தால் வாகனத்தின் சக்கரம் பூட்டு போடப்படும். 6 மணி நேரம் கடந்தால் வாகனம் அங்கிருந்து அகற்றப்படும். அபராதம் விதிக்கப்பட்ட பிறகு வாகனம் ஒப்படைக்கப்படும்.





















