Chennai Rains: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல மாறிய சாலைகள் - புலம்பும் சென்னைவாசிகள்!
chennai rains: சென்னையில் காலை முதல் பெய்த மழையால் நகரத்தின் முக்கியமான பல பகுதிகளில் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

chennai rains: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை:
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மந்தமாக காணப்பட்டது. மதியம் முதல் சென்னையின் பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, மாம்பலம், திநகர், கோயம்பேடு, வடபழனி போன்ற சென்னையின் முக்கியமான பல இடங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது.
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர்:
இதன் காரணமாக, சென்னையின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் வளைவின் அருகே மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. மேலும், மெட்ரோ பணிகள் நடக்கும் வடபழனி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி:
சென்னையில் மெட்ரோ பணிகள் பல இடங்களில் நடந்து வரும் நிலையில், சென்னையில் மழை காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதற்காக பல கோடிகளை அரசு செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், சிறிய மழைக்கே நகரத்தின் பல முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பது வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. வேதாரண்யம், திருநெல்வேலியில் ஊத்து, ராமநாதபுரத்தில் வாலிநோக்கம் பகுதிகளில் 3 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் நாலுமுக்கு, ராமநாதபுரம், திருநெல்வேலியில் காகாச்சி, ராமநாதபுரம் தங்கச்சிமடம், கடலூரில் பரங்கிபேட்டை, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை தேங்கியுள்ளது.
குறிப்பாக, தென்தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர்ந்து வெயிலால் சிரமத்திற்கு ஆளாகி வந்த பொதுமக்களுக்கு இந்த மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இதுபோன்று மழை வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி, நீர்நிலைகளில் நீர்மட்டத்தையும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னையின் நீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் போன்ற ஏரிகளின் நீர்மட்டத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

