Chennai Rains: கடந்த கால வெள்ள பாதிப்பு வைத்து பணி செய்கிறோம் - அமைச்சர் கே.என் நேரு விளக்கம்
கடந்தகால வெள்ளபாதிப்பு அனுபவத்தை வைத்து இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். சராசரி மழை பெய்யும் பொழுது (20 செமீ.வரை ) எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது

வடகிழக்கு பருவமழை - அமைச்சர் ஆய்வு
சென்னைக்கு மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் சுரங்கப்பாதை , தணிகாசலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ;
சென்னை உள்பட பல மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 40 செ.மீ வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பால் பாக்கெட் , பிஸ்கெட் தயார் நிலை
கடந்த கால அனுபவத்தை வைத்து இந்த முறை பணி செய்து வருகிறோம், நிவாரண முகாம்களில் பால், பிஸ்கெட், உள்ளிட்டவைகள் தயாராக வைத்து உள்ளோம், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது, தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்து உள்ளோம், மக்களுக்கு எந்த சிரமம் இல்லாமால் அரசு அனைத்து நடவடிக்கை எடுத்து உள்ளது.
990 இடங்களில் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது, மாநகராட்சி ஊழியர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுரங்கப் பாதைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ பணிகள் மற்றும் இரயில்வே மேம்பாலப் பணிகளால் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளது. அங்கு அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலில் தொடங்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்று விட்டது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
பொதுமக்களின் குற்றச்சாட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை கட்டுப்பாட்டு அறை உறுதி செய்கிறது. சராசரி மழை பெய்யும் பொழுது எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது, சராசரியை விட அதிகமாக மழை பெய்யும் என்று சொல்லியிருப்பதால் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்காமல் நடிவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, இரண்டு மூன்று மணி நேரத்தில் அதிக மழை பெய்யும் என்பதால் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

