ஆத்தாடி.. இவ்ளோ பெருசா.. சென்னை சாலையில் திடீர் வெடிப்பு - பீதியில் மக்கள்
சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே சாலையில் திடீரென 100 அடி தூரத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

சென்னைக்கு அருகில் உள்ள முக்கியமான நகரம் பெருங்குடி. பல்வேறு தொழில் நிறுவனங்களும், குடியிருப்புகளும் அடங்கிய பரபரப்பான நிறுவனம். இந்த பகுதியில் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சாலையில் வெடிப்பு:
இந்த நிலையில், பெருங்குடி ரயில் நிலையம் அருகில் நேற்று இரவு திடீரென சாலையில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதிவாசிகள் மிகுந்த அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ளனர். ரயில்நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் சாலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
100 அடிக்கு பிளந்த சாலை:
அந்த சாலையின் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே சாலையில் வெடிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பு சுமார் 100 அடி தொலைவிற்கு ஏற்பட்டது. இந்த சாலையின் அருகே நடந்து வந்த கட்டுமான பணியின்போது ராட்சத இயந்திரம் மூலமாக 60 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதில், சிமெண்ட், ஜல்லி கொட்டி நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளின்போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உடனடியாக வெடிப்பு நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
போக்குவரத்துக்கு தடை:
பின்னர், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த சாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெடிப்ப இடந்த இடத்தை சரி செய்யும் பணிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பல இடங்களில் இதுபோன்று திடீரென சாலைகளில் ராட்சத பள்ளங்கள் ஏற்படுவதும், திடீரென வெடிப்புகள் ஏற்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதேபோல, சென்னை புளியந்தோப்பில் டிமலர்ஸ் சாலையில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டியபோது திடீரென மண் சரிவு உண்டாகி பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அடிக்கடி விழும் பள்ளங்கள்:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரமணி அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில், கார் ஒன்று கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் இதுபோன்று அடிக்கடி பள்ளங்களும், வெடிப்புகளும் ஏற்படுவது ஆரோக்கியமற்ற போக்கு என்றும், பாெதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அனைவரும் கவலைப்படுகின்றனர். இதனால், இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.





















