Chennai Peripheral Ring Road: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்! சிங்கப்பெருமாள் கோயில் - பூஞ்சேரி சாலை டெண்டர் அறிவிப்பு! 2028-க்குள் திட்டம் நிறைவு?
chennai peripheral ring road latest news: "சென்னை எல்லைச்சாலை திட்டத்தின் இறுதி பகுதியாக, சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரை 28 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது "

Chennai Peripheral Ring Road Status: சென்னை எல்லைச்சாலை திட்டத்தின் இறுதி பகுதியாக, சுமார் 28 கிலோமீட்டர் தூரத்திற்கு சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி வரை சாலை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து நெரிசல் - Chennai traffic conjunction
சென்னை அருகே உள்ள எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் இந்தியாவில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. தொழிற்சாலையில் இருந்து துறைமுகத்திற்கு, செல்லும் கனரக வாகனங்கள் தாமதமாக செல்வதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் துறைமுகத்திற்கு செல்ல முடியாததால், மத்திய மற்றும் மாநில அரசுக்கு பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், புதிய சாலையை அமைக்க அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பாக மாநில அரசு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரியில் துவங்கி, சிங்கப்பெருமாள் கோயில் வழியாக ஸ்ரீபெரும்புதூர் - தாமரைப்பாக்கம் - தச்சூர் - மீஞ்சூர் - காட்டுப்பள்ளி - எண்ணூர் துறைமுகத்தை சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 137 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல கட்டமாக இந்த சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை எல்லைச்சாலை திட்டம் - Chennai Peripheral Ring Road Project
இந்த திட்டத்திற்கு சென்னை எல்லைச்சாலை திட்டம் என பெயர் வைக்கப்பட்டது. மிகவும் நீண்ட சாலை என்பதால் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த சாலை பணிகளை மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இந்த சாலை பத்து வழிச்சாலையாக அமைய உள்ளது. சுமார் 12,301 கோடி ரூபாய் செலவில் இந்த சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காட்டுப்பள்ளி துறைமுகம் - தச்சூர் வரை, தச்சூர் முதல் திருவள்ளூர் வரை, திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை, ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை, சிங்கப்பெருமாள் கோயில் முதல் மாமல்லபுரம் வரை என 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. காட்டுப்பள்ளி துறைமுகம் முதல் தச்சூர் வரை மற்றும் தச்சூர் முதல் திருவள்ளூர் வரை 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இணையும் சாலைகள் என்னென்ன? Chennai Peripheral Ring Road Connectivity
இந்தச் சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைகிறது.
சிங்கப்பெருமாள் கோயில் - பூஞ்சேரி (Chennai Peripheral Ring Road from Singaperumalkoil to Poonjeri)
சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரை, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியுடன் 27.41 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. சுமார் இதற்காக 2800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி என்ற பகுதியில் தொடங்கி, காரணை, குன்னப்பட்டு, மானாமதி, ராயமங்கலம், சிறுகுன்றம், அனுமந்தபுரம், செங்குன்றம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது.
திட்டம் முடிவடைவது எப்போது? chennai peripheral ring road completion date ?
இறுதி கட்ட சாலை அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், இந்த எல்லைச்சாலை திட்டம் வருகின்ற 2028-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















