சென்னை ATM கொள்ளை: இரும்பு தகடு வைத்து பணத்தை திருடிய கும்பல்
சென்னையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை கீழே காணலாம்.

ஏ.டி.எம் இயந்திரத்தில் இரும்பு தகடு வைத்து , பணத்தை கொள்ளையடித்த நபர்
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 39 ) தனியார் நிறுவனம் ஏ.டி.எம்., வாயிலாக, மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். முகப்பேர் கிழக்கு பாரிசாலையில் உள்ள எஸ்.பி.ஐ - ஏ.டி.எம்., மையத்தில், பொதுமக்கள் எடுக்கும் பணம் இயந்திரத்திலேயே சிக்கி கொள்வதாக வந்த புகாரையெடுத்து , நேரில் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கான பணம் வெளியே வரும் திறப்பு பகுதியில் இரும்பு தகடை வைத்து , கொள்ளை நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் , அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபர்கள் மூன்று பேரை பிடிக்க முயன்றார். அதில் இருவர் தப்பி ஓடி விட , ஒருவர் பிடிபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஜெ.ஜெ.. நகர் போலீசார் பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த சிவா ( வயது 20 ) என தெரிந்தது.
விசாரணைக்கு பின் காவல் துறையினர் கூறுகையில், சிவா தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஏ.டி.எம் இயந்திரத்தின் பணம் வரும் வழியில் இரும்பு தகடை வைத்து விடுவார். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது , பணம் இயந்திரத்தினுள் சிக்கி கொள்ளும். அதன் பின் வாடிக்கையாளர்கள் சென்றதும் , இயந்திரத்தில் சிக்கிய பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி விடுவர். அவரிடம் இருந்து இரும்பு தகடு , பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவாவை கைது செய்த ஜெ.ஜெ.. நகர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சிவாவின் கூட்டாளிகளை தேடுகின்றனர்.
பைக் மீது லாரி மோதி, ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழப்பு
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மதுசூதனன் பாரிக் ( வயது 33 ) ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர். இவர் பாடிபுதுநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி பைக் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் பிரியா ரமணி ( வயது 35 ) என்பவரை தன் 'ஹோண்டா ஷைன்' பைக்கில் சவாரி ஏற்றி , கோயம்பேடில் இருந்து மாதவரத்திற்கு சென்று கொண்டிருந்தார். மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் 200 அடி சாலை மதுசூதனன் அருகே செல்லும் போது , மதுசூதனன் பைக்கை முந்த முயன்ற லாரி , பைக்கின் பக்கவாட்டில் மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த மதுசூதனன் பாரிக் , சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவர் பிரியா ரமணி பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மதுசூதனன் பாரிக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரான லாரி திருவண்ணாமலையைச் சேர்ந்த அஜித் ( வயது 29 ) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.





















