Chennai Metro ; கோடம்பாக்கம் வந்த மயில்... சென்னை மெட்ரோ பணியில் புதிய சாதனை.. அடுத்து இலக்கு என்ன?
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், நகர் முழுவதும் 118.9 கி.மீ. நீளத்தில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்டத் திட்டத்தினை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளில் பனகல் பூங்காவில் இருந்து துவங்கிய மயில், 2047 மீட்டர் நீளத்தில் சுரங்கம் தோண்டி, 2025 ஜூலை 23ஆம் தேதி கோடம்பாக்கம் நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.
மெட்ரோ இரயில் கட்டம் 2-இன் வேகமான முன்னேற்றம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், நகர் முழுவதும் 118.9 கி.மீ. நீளத்தில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்டத் திட்டத்தினை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய வழித்தடமாக உள்ள வழித்தடம் 4-ல், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.8 கி.மீ. நீளத்தில் 12 சுரங்க நிலையங்கள் மற்றும் 18 உயர்த்தப்பட்ட நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
சுரங்க தோண்டும் ‘மயில்’ கோடம்பாக்கம் வந்தடைந்தது
வழித்தடம் 4-இல், கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை 10.03 கி.மீ. நீளத்திற்கான சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் ITD சிமென்டேஷன் இந்தியா நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களில் ஒன்று, "மயில்" என்ற இயந்திரம்.
2024 மே 2ஆம் தேதி, பனகல் பூங்காவில் இருந்து துவங்கிய மயில், 2047 மீட்டர் நீளத்தில் சுரங்கம் தோண்டி, 2025 ஜூலை 23ஆம் தேதி கோடம்பாக்கம் நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.
சவாலான பிரிவை வெற்றிகரமாக கடந்தது
பனகல் பூங்கா - கோடம்பாக்கம் இடைப்பட்ட இந்த பிரிவு, கட்டம் 2-இல் மிகவும் நீளமான சுரங்கப்பாதையாக அமைந்துள்ளது. மயில், இந்தப் பாதையில் 190 கட்டிடங்கள் வழியாக, அதில் 50-க்கும் மேற்பட்ட பழைய குடியிருப்புகள், இரயில்பாதை, தேவாலயங்கள், மேம்பாலங்கள் ஆகியவற்றை கடந்து பணியை முடித்துள்ளது.
இதில், செயலில் உள்ள இரயில்பாதைக்கு இணையாக சுரங்கம் தோண்ட வேண்டிய கடுமையான சூழ்நிலையும் இருந்தது. இருந்தபோதும், பொதுமக்கள் மற்றும் தற்போதைய போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பணியை முடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் மயில் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து கோடம்பாக்கம் நிலையத்தை வந்தடைந்தது.
— Chennai Metro Rail (@cmrlofficial) July 23, 2025
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 118.9 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன்… pic.twitter.com/Nhk2lO5Haj
நிகழ்வில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு
இந்த முக்கிய கட்டமைப்புப் பணியின் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், ITD சிமென்டேஷன் நிறுவனம் மற்றும் பொதுவாலோசகர் நிறுவனங்களை சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்று பார்வையிட்டனர்.






















