Chennai rain: அடுத்த 3 மணி நேரம்..! கொட்டப்போகுது மழை..! எந்தெந்த மாவட்டங்களில் வாய்ப்பு..?
சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தனது ட்விட்டர் பதிவுகளில், அம்பத்தூர், பூந்தமல்லி, மாதாவரம் ஆகியவற்றுடன், பொன்னேரி உள்ளிட்ட திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில், அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்:
இதேபோன்று, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
மழைக்கான வாய்ப்பு:
இதன் காரணமாக, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25.11.2022 மற்றும் 26.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
குளிர் சூழல்:
கிழக்கு கடல் பகுதியில் இருந்து மியான்மர் வழியாக வங்கக் கடலுக்குள் குளிர் அலையுடன் கூடிய காற்று வீசுவதால் அந்த காற்று கடல் வழியாக பயணித்து தமிழகத்தின் தரைப்பகுதியின் ஊடாக செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குளிர் காற்று வீசுகிறது. இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளிர் காற்றின் பரவலால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பகல் இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும்.