மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 30க்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் உயிரிழப்பு.
சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரினாவில் குவிந்த மக்கள்:
இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இன்று சென்னை மெரினாவில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 பேர் உள் நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், 60 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார். 9 பேர் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 25 பேர் வீடு திரும்பி விட்டனர். மேலும் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்தம்பித்த சென்னை:
விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்த லட்சக்கணக்கான பொதுமக்கள், போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால், மெரினா கடற்கரையில் இருந்து தங்கள் வீடுகளை நோக்கி படையெடுத்தனர். ஆனால், சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தனர்.
சென்னை வேளச்சேரி ரயில் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ நிலையம், சென்னை ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ரயிலில் இடம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
இதேபோன்று சாலை முழுவதும் வாகன நெரிசலுடன் காணப்படுகிறது. கூடுதல் ரயில்கள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கி இருக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதேபோன்று போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவலர்கள் விரைவாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பல்வேறு இடங்களில் பேருந்து கிடைக்காததால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.