Chennai Heavy rain: கருப்பு நிறமாக மாறும் மெரினா கடல்: ஆபத்தா? அச்சுறுத்தலா?
மெரினா கடற்கரை கருப்பு நிறத்திற்கு மாறுவது இது புதிதல்ல. இதோ போல் 2017 ல் பெய்த கனமழையால் மெரினா கடற்கரை கருப்பு நிறமாக மாறியிருக்கிறது.
வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு தான் என்றாலும், இம்முறை முன்கூட்டியே, அலர்ட் எதுவும் இல்லாமல் சென்னை மூழ்கியிருக்கிறது. ஒரு நாள் மழை,ஊரையே புறட்டிப் போட்டிக்கிறது. இதில் ஆறுதலான விசயம், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சேப். ஆனாலும் சென்னையே கதி என இருப்போர் நிலை கவலைக்கிடம்
பல பகுதிகள் நீரால் மூழ்கப்பட்டுள்ளது, சூழப்பட்டுள்ளது. மழை ஓயாத நிலையில சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மிதக்கிறது, தவிக்கிறது. முதல்வர் ஆய்வுக்குப் பின் அரசு இயந்திரங்கள் முடக்கிவிடப்பட்டுள்ளன. ஆனாலும் இயற்கை சில நேரம் மனிதர்களின் முயற்சிகளை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது. அது மீறி மீட்கும் பெரும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க சென்னை மெரினா கடல் கருப்பு நிறத்திற்கு மாறியிருக்கிறது. இது தான் இப்போதைய ஹாட் டாபிக். பொதுவாக பேரிடர் காலங்களில் சில சமிக்ஞைகள் சில முன் அறிவிப்புகளை தரும் என்பார்கள். அந்த வகையில், கடல் நிறம் மாறியது ஏதோ ஒரு சமிக்ஞை தருகிறது என பரவலாக பேச்சு பரவி வருகிறது. உண்மையில் மெரினா கடற்கரை நிறம் மாறுவதால் என்ன நடக்கும்? ஏன் இது நடந்தது? என பார்க்கலாம்!
மெரினாவுக்கு இது புதிதல்ல!
மெரினா கடற்கரை கருப்பு நிறத்திற்கு மாறுவது இது புதிதல்ல. இதோ போல் 2017 ல் பெய்த கனமழையால் மெரினா கடற்கரை கருப்பு நிறமாக மாறியது. அப்போது 3 நாட்கள் தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடல், கருப்பு நிறத்திற்கு மாறியது. இதோ போல் இன்னும் சில முறை மெரினா கடல் கருப்பு நிறம் பூண்டுள்ளது. அதற்கு காரணமும் இருந்தது.
கருப்பு நிறம் மாற என்ன காரணம்?
சென்னையை ஒட்டி ஓடும் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள், இறுதியில் வந்தடைவது மெரினாவுக்கு தான். ஒவ்வொரு முறை மழை கொட்டித்தீர்க்கும் போதும், அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள் வழியாக சாக்கடை கழிவுகளும், சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும், மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு, கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. கிட்டத்தட்ட சென்னையின் பாதிக்கு மீதான கழிவுகள் கடலில் கலப்பதால் அதை பெறும் வங்கக்கடலின் நிறம் நீல நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மாறுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இயற்கையாக நடக்கும் நிலை தான் என்றாலும், அதன் பின்னணியில் நாம் கொட்டிய கழிவுகளின் செயற்கையும் இருக்கிறது.
தீபாவளி குப்பைகளுக்கு முக்கிய பங்கு!
2017 ல் கடல் நிறம் மாறிய போது, 3 நாட்கள் கனமழை காரணமாக இருந்தது. இம்முறை ஒரே நாள் கனமழையில் கடல் நிறம் மாறியிருப்பதிலும் காரணம் உள்ளது. நேற்று முன்தினம் தான் தீபாவளி பண்டிகை முடிந்திருக்கிறது. பெரும்பாலும் பட்டாசு கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. அவை தான் மழைநிரில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே பட்டாசுகள் படும் நீர் கருப்பாக மாறும். அதிலுள்ள மருந்தின் தன்மை அப்படி. அவை தான் எளிதில் கடல்நீரைகருப்பு நிறத்திற்கு மாற்றியிருக்கின்றன.
கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தா?
பொதுவாகவே கடலின் தன்மையை பொருத்து அதில் வாழும் உயிரினங்களின் செயல்பாடுகள்இருக்கும். மெரினா போன்ற பெரிய கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். குறிப்பாக மீன்கள் பேரழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கழிவு... எத்தனை வகையில் பாதிப்பை தருகிறது என்பதை நாம் உணர்ந்தால், இது போன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும் என்கிற உணர்வு வரும்.