(Source: ECI/ABP News/ABP Majha)
Football Player Priya Death : கால்பந்து வீராங்கனை மரணம் : "வேண்டுமென்றால் சரணடையுங்கள்.." - மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு
கால்பந்து வீரங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால்ராம் சங்கர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீனை மறுத்துள்ளது.
கடந்த நவம்பர் 15ஆம் தேதி, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணம் அடைந்தார். கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வலது காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடையவே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
மருத்துவர்களின் கவனக்குறைவின் காரணமாக பிரியா உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குநர் சாந்திமலர் உத்தரவிட்டார்.
விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சோம சுந்தரம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் உத்தரவிட்டார்.
அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மருத்துவர்களும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால்ராம் சங்கர் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னதாக, மருத்துவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா? என விசாரணை நடத்த வேண்டும் என அரசு தரப்பு தெரிவித்திருந்தது.
சரண் அடைவதற்காக காவல்நிலையம் செல்லவே ஆபத்தாக உள்ளது. மிரட்டல் வந்த வண்ணம் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கேட்ட நீதிமன்றம், மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும். வேண்டுமானால் சரண் அடையுங்கள் என நீதிபதி தெரிவித்தார்.
"தற்போதுதான் சம்பவம் நடைபெற்றிருப்பதால் விசாரணை நடத்த அவகாசம் வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. மருத்துவர்கள் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Justice AD Jagadish Chandira of Madras High Court to hear today the anticipatory bail petitions filed by doctors A. Paul Ramshankar (34) & K. Somasundar (34) in connection with a case registered by the police following the death of footballer Priya @THChennai
— Mohamed Imranullah S (@imranhindu) November 18, 2022
பிரியா மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிரியா மரணம் தொடர்பான வழக்கை மனித உரிமைகள் ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் விசாரணைக்கு எடுத்துள்ளார்.