கடலூரில் வளர்ந்த காதல்.. வண்டலூரில் முடிந்த சோகம் - காதல் மாதத்தில் காதல் ஜோடி மரணம்
Train Accident: தாம்பரம் அடுத்த வண்டலூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது காதல் ஜோடி உயிரிழந்தது.

Tambaram Train Accident: கடலூர் மாவட்டம் பாடியநல்லூரை சேர்ந்த விக்ரம் (22). கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (22). இருவரும், கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.
விக்ரம் மற்றும் ஆதிலட்சுமி ஆகியோர், ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி, இருவருடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் கல்லூரி காலத்திலிருந்து தொடர்ந்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். தற்போது படிப்பை முடித்த இருவரும், சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
காதலர்கள் சந்திப்பு
விக்ரம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே போன்று ஆதிலட்சுமியும் கிண்டியில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் காதலர்கள் என்பதால் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதையும் வழக்கமாக வைத்து வந்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று இரவு வண்டலூரில் இருவரும் சந்தித்து விட்டு, வண்டலூர் ரயில்வே பிரிட்ஜ் அருகே உள்ள இடத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக சென்ற மின்சார ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளனர்.
துடிதுடித்து பிரிந்த உயிர்
ரயில் வருவதை கவனிக்காமல் சென்றதால் இருவரும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே ஓட்டுநர் உடனடியாக ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். முதலில் தற்கொலை செய்து கொண்டனர் என தகவல் வெளியாகிய நிலையில், ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.
ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழந்தவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















