Train Violence : மின்சார ரயிலில் மோசமாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்! சென்னையில் பயங்கரம்!
சென்னையை அடுத்த பட்டரவாக்கத்தில் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் கற்களாலும், பாட்டில்களாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பல பழம்பெரும் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலரும் மின்சார ரயில் மூலமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய வெளிமாவட்டங்களில் இருந்தும் தினசரி கல்லூரிக்கு வந்து படித்துவிட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர்.
ரவுடிகள்போல சண்டையிட்ட மாணவர்கள்:
அவ்வாறு கல்லூரிகளில் செல்லும்போது சில கல்லூரி மாணவர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே இன்று மின்சார ரயிலில் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கும், பட்டரவாக்கம் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டையின்போது இரு தரப்பு மாணவர்களும் கற்களாலும், பீர் பாட்டில்களாலும் ஒருவரை மாற்றி ஒருவர் சரமாரிய வீசிக்கொண்டனர். ரவுடிகள் போல கல்லூரி மாணவர்கள் கற்களாலும், பாட்டில்களாலும் தாக்கிக் கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
3 மாணவர்கள் கைது:
மாணவர்கள் சண்டையிட்டதை அங்கே இருந்த சக பயணிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சண்டை தொடர்பாக, காவல்துறையினர் தற்போது வரை 3 மாணவர்களை கைது செய்துள்ளனர். அந்தந்த கல்லூரி நிர்வாகங்களும் சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
சமீபகாலமாகவே, புறநகர் மின்சார ரயில்களில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் சிலர் ரவுடிகள் போல பட்டாக்கத்தியுடன் உலா வருவதும், அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மாணவர்கள் ரவுடிகள் போல நடந்து கொள்வது மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கரூரில் வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் மீது குண்டாஸ் பாயும் - மாவட்ட எஸ்பி எச்சரிக்கை
மேலும் படிக்க: Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பின் அமைதியான முறையில் நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்; பரவசமடைந்த பக்தர்கள்