சென்னை : சீட்டு மோசடி , கோயம்பேட்டில் மண்டை ஓடு , ஆட்டோ வீலிங் - பரபரப்பு சம்பவங்கள்
மாதாந்திர சீட்டு நடத்தி 65.91 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்

சென்னையில் சீட்டு நடத்தி 65.91 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் ( வயது 33 ) இவரது மனைவி டெய்சி இசபெல்லா ( வயது 30 ) இவருக்கு பழக்கமான தமிழ்ச்செல்வி ( வயது 38 ) என்பவரும், அவரது கணவர் பிரபு ( வயது 41 ) என்பவரும் வருடாந்திர கல்வி கட்டணம் மாத சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
மாதம் 1,000 வீதம் 12 மாதங்கள் கட்டினால், 12,000 ரூபாயுடன் கூடுதலாக 4,000 சேர்த்து, 16,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். வைப்பு நிதி திட்டத்தில், 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம், 3,000 வட்டியாக தருவதாகவும் ஆசை காட்டியுள்ளனர். இதையடுத்து, ராஜேஷ்குமார் 8.55 லட்சம் ரூபாய் கட்டி உள்ளார்.
சீட்டு பணம் முதிர்ச்சியடைந்த பின் பணத்தை கேட்டால் தமிழ்ச்செல்வி தரப்பினர் மிரட்டி உள்ளனர். இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதில் ராஜேஷ்குமார் உட்பட 38 பேரிடம், 65.91 லட்சம் ரூபாய் வரை, பிரபு - தமிழ்ச் செல்வி தம்பதி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக தமிழ்ச் செல்வியின் தாய் சரஸ்வதி ( வயது 65 ) இருந்துள்ளார். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு சந்தை பாதாள சாக்கடையில் கிடந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடால் பரபரப்பு
சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள பாதாள சாக்கடையை ஒப்பந்த ஊழியர்களை வைத்து அங்காடி நிர்வாக குழு பராமரித்து வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு பழச்சந்தை வளாகத்தின் 18 வது எண் கதவு அருகே உள்ள பாதாள சாக்கடை மேல் மூடியை திறந்து, இயந்திரத்தால் சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, பாதாள சாக்கடையில் இருந்து, மனித மண்டை ஓடு மற்றும் நீளமான இரண்டு எலும்புகள் கிடைத்தன. இது குறித்து, கோயம் பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவற்றை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் யாராவது அங்கு விழுந்து இறந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டு உடல் பாதாள சாக்கடையில் வீசப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோயம்பேடு 100 அடி சாலையில் ஆட்டோ பின் சக்கரத்தை தூக்கியபடி ஓட்டியவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கடந்த 5ம் தேதி இரவு, ஒரு ஆட்டோ அதிவேகமாகவும், ஆட்டோவின் பின் சக்கரத்தை தூக்கி, பொது மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோவின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.
இதையடுத்து ஆட்டோ வீலிங் செய்த திருவேற்காடு அயப்பாக்கத்தைச் சேர்ந்த வாசு தேவன் என்ற 'பஞ்சர்' வாசு ( வயது 41 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆட்டோ மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.
6 வயது மகளை கொன்ற நபருக்கு குண்டாஸ் - போலீஸ் அதிரடி
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ( வயது 35 ). இவரது மனைவி ரெபேக்கா ( வயது 26 ) கடந்த ஜூலை 20 - ம் தேதி தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், 6 வயது மகளை சதீஷ் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில், சதீஷை மவுண்ட் போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த சதீஷ், ரெபேக்கா மற்றும் அவரது சகோதரிக்கு, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். விசாரித்த ஓட்டேரி போலீசார் சதீஷை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.






















