ABP Exclusive: 'அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி ஜன்னல்' ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலட்சியம்! அச்சத்தில் பயணிகள்!
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 ஆம் நடைமேடையில் கண்ணாடி ஜன்னல், கயிறு மூலம் அந்தரத்தில் கட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்பது மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சேவையாக மாறியுள்ளது. பேருந்து மற்றும் வாகனங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தால் பலரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கிய போது அதிக கட்டணம் காரணமாக மக்கள் அதனை பயன்படுத்த தயங்கி வந்தனர்.
மெட்ரோ சேவை:
அதனை தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிக மக்கள் பயணம் மேற்கொள்வதால் மக்களின் வசதிக்காக பீக் நேரங்களில் ரயில்கள் இயக்கப்படும் நேரம் 3 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.
அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி:
இதனால் சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை ஓரளவு தீர்வை கண்டுள்ளது. இத்தகைய மெட்ரோ ரயில்கள் சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் இயங்கி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூருக்கு ஒரு வழித்தடத்தில் இயங்குகிறது. மற்றொரு வழித்தடமாக விமான நிலையம் தொடங்கி விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருக்கும் பொதுமக்கள் தவிர்த்து வெளியூரில் இருந்து வருபவர்களும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதால் ஒவ்வொரு மாதமும் பயணிப்பவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்தில் 84.37 லட்சம் பயணிகளும், அக்டோபர் மாதத்தில் 85.50 லட்சம் பயணிகளும் பயணித்தார்கள். தொடர்ந்து நவம்பர் மாதத்தில் 80,01,210 பேர் பயணித்துள்ளனர்.
பயணிகள் அச்சம்:
இப்படி தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு விஷயம் நடந்துள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முக்கிய நிலையமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கிருந்து மக்கள் பச்சை வழிதடம் அல்லது நீல வழித்தடத்திற்கு மாறி பயணம் மேற்கொள்வார்கள்.
இங்கு சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை இயக்கப்படும் ரயில், அதாவது 2 ஆம் நடைமேடை மின்தூக்கி அருகே ஜன்னல் ஒன்று அந்தரத்தில் கயிறு மூலம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்னல் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் இருப்பது ஆபத்தானது என அந்த வழியாக செல்லும் பயணிகள் அச்சத்தில் கூறியுள்ளனர். முதல் தளத்தில் இந்த கண்ணாடி ஜன்னல் அந்தரத்தில் இருப்பதால் மக்கள் மீது விழும் அபாயம் உள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுபோன்ற அலட்சிய நடவடிக்கைகளம் இனிமேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.