Kilambakkam Metro : கிடைத்தது அனுமதி.. பிறந்தது விடிவு காலம்.. ஏர்போர்ட் To கிளாம்பாக்கம் டபுள் டக்கர் மெட்ரோ..
Kilambakkam Metro Station "சென்னை விமான நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது"

Chennai Airport To Kilambakkam Metro Project: முன்னதாக சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை, மெட்ரோ அமைப்பதற்கான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் - Chennai Metro Rail Limited (CMRL)
சென்னை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி விரைவாக, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் சேவை, வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்கள் தற்போது 2 வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116 கிலோமீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படுகிறது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் - Kilambakkam Bus Terminus
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இன்றைய சூழலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால், பேருந்து மூலமாக மட்டுமே செல்லக்கூடிய சூழல் உள்ளது.
தற்போது இருபது கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், மெட்ரோ அமைக்க வேண்டும் என பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பே, அதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கியது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை - Kilambakkam Metro Station
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை சுமார் 15.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், பல்வேறு நிர்வாக சிக்கல்கள் காரணமாக தாமதமாகி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில், அமைப்பதற்கான புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் என்னென்ன ? Key Features Of Kilambakkam Metro
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால சாலை அமைய உள்ளது. அதற்கு மேல், 18 முதல் 20 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பால பாதை அமைய உள்ளது. கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பாதை, மேம்பால பாதை மற்றும் ரயில் பணிமனை பணிகள் ஆகியவை மேற்கொள்ள 9445 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தடையின்றி செல்ல, வெளிவட்ட சாலையுடன் இணைக்க தாம்பரம் அருகே சாய்வு பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து அங்கிருந்து, செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட உள்ளது.
சென்னை டூ கிளாம்பாக்கம் வரை மெட்ரோ அமைக்க ஒப்புதல் - Kilambakkam Metro approval
கிளாம்பாக்கம் மெட்ரோ அமைப்பதற்கு தொடர்பான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது தொடர்ந்து, இதற்காக அனுமதி எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் ஒருவழியாக சென்னை விமான நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ அமைப்பதற்கான திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் வரை மெட்ரோ அமைக்கப்பட்டால், சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு மிகப்பெரிய தலைவலி குறையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எத்தனை ரயில் நிலையங்கள் அமைய உள்ளன ?
கிளாம்பக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 13 நிறுத்துங்கள் அமைய உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வண்டலூர் ரயில் நிலையம், பீர்க்கங்கரணை, இரும்புலியூர், தாம்பரம், திரு.வி.க நகர், மகாலட்சுமி நகர், குரோம்பேட், கோதண்டம் நகர், பல்லாவரம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.





















