சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்..! மூன்றரை ஆண்டுகளுக்கு பின் துவங்கிய சேவை
தினமும் இயக்கப்பட்டு வந்த 12 விமான சேவைகள், தற்போது 14 ஆக அதிகரிப்பு. விமான பயணிகள் மகிழ்ச்சி.
கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த, சென்னை- சிங்கப்பூர்- சென்னை, ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு, நேற்று நள்ளிரவில் இருந்து, மீண்டும் இயங்கத் தொடங்கியது. சென்னை சிங்கப்பூர் சென்னை இடையே தினமும் இயக்கப்பட்டு வந்த 12 விமான சேவைகள், தற்போது 14 ஆக அதிகரிப்பு. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி.
சென்னை ( Chennai News ): சிங்கப்பூர் சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதாலும், அங்கிருந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேரடி இணைப்பு விமானங்கள் இருப்பதாலும், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதுவரை நாள் ஒன்றுக்கு 6 விமானங்கள், சென்னை சிங்கப்பூருக்கும், சிங்கப்பூர் சென்னை இடையே 6 விமானங்கள், நாள் ஒன்றுக்கு 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது.
சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர்
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து, கூடுதலாக சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர் இடையே, விமான சேவைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட்டு, நள்ளிரவு 11:50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதே விமானம் சென்னையில் இருந்து நள்ளிரவு 12:35 மணிக்கு 131 பயணிகளுடன், சிங்கப்பூர் புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம், முதல் நாளில் தாமதமாக, இன்று அதிகாலை 1:42 மணிக்கு புறப்பட்டு சென்றது. இது தினசரி விமானங்களாக இயக்கப்படுகிறது. இதனால் சென்னை-சிங்கப்பூர்-சென்னை இடையே, இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 12 லிருந்து 14 ஆக அதிகரித்துள்ளது.
மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின்பு
இப்போது புதிதாக சென்னைக்கு விமான சேவையை தொடங்கியுள்ள ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஏற்கனவே சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு பதிப்பு காரணமாக, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்பு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு இந்த விமான நிறுவனம், விமான சேவையை தொடங்கி நடத்தியது. ஆனால் சென்னைக்கு மட்டும் தொடங்காமல் இருந்தது. இப்போது சுமார் மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின்பு, மீண்டும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர்- சென்னை சிங்கப்பூர்- இடையே விமான சேவையை தொடங்கியுள்ளது.இது விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.