விவசாயிகளின் கண்ணீர் ; ஜவ்வரிசி தொழிலில் கலப்படம் !! அரசு நடவடிக்கை தேவை
மரவள்ளி கிழங்கு விலை சரிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காக்க, உரிய இழப்பீட்டை அரசு வழங்குவதுடன் , குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இது குறித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செயலர் நல்லசாமி கூறியதாவது ;
தேசிய அளவில் மரவள்ளி சாகுபடி, ஜவ்வரிசி தொழிலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சேலம் , நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில், 300 - க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் இயங்குகின்றன. இங்கு உற்பத்தியாகும் ஜவ்வரிசி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு அதிகம் அனுப்பப்படுகிறது.
ஜவ்வரிசியில் கலப்படம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு டன் மரவள்ளி கிழங்கு, 12,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது 5,000 - 5,500 ரூபாயாக விற்பனை விலை குறைந்துள்ளது. கண்ணை பறிக்கும் ஜவ்வரிசி நிறம் வர வேண்டும் என்பதற்காக, துணிகளை வெளுக்க பயன்படுத்தும் சோடியம் ஹைப்போ குளோரைட், கால்சியம் ஹைப்போ குளோரைட், கந்தக அமிலம் போன்ற ரசாயன பொருட்களை கலக்கின்றனர்.
மக்கள் உடல் நலம் பாதிக்காது
சோள மாவு விலை குறைவு என்பதால், அதை கலக்கின்றனர். கலப்படம் தவிர்த்தால், ஜவ்வரிசி தொழில் சிறக்கும். மரவள்ளி தேவை உயரும். மக்கள் உடல் நலம் பாதிக்காது. ஒரு ஏக்கர் மரவள்ளி சாகுபடி செய்ய, 70,000 - 75,000 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கரில், எட்டு முதல் 10 டன் மகசூல் கிடைக்கும். ஒரு டன், 12,000 ரூபாய் என்றால், விவசாயிக்கு, 40,000 முதல், 45,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
அதுவே 5,500 ரூபாய் என்றால், 20,000 - 25,000 ரூபாய் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதை வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதில்லை. அரசு இதை நேரடியாக உணர்ந்து, விவசாயிகளை காக்க, மரவள்ளி விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்.
விலை சரிவை கண்காணிக்க வேண்டும்
செலவு , சந்தை மதிப்பை கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து, விலை சரிவை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் மரவள்ளி விவசாயிகள், வேறு பயிருக்கு மாறும்போது, இப்பயிர் சாகுபடியும், ஜவ்வரிசி ஆலைகளும் அழியும் என இவ்வாறு கூறினார்.





















