கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
BSP Leader Murdered In Chennai: சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
BSP Leader Murdered In Chennai: சென்னை பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவமானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BSP மாநில தலைவர் மீது அரிவாள் வெட்டு:
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் , இன்று அவரது வீட்டருகே இருந்திருக்கிறார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலானது, அவரை சூழ்ந்தது.
இதையடுத்து, அந்த மர்ம கும்பலானது, அரிவாளால் வெட்டித் தாக்கியுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்தார். பின்னர், அந்த கும்பலானது தப்பி ஓடிவிட்டனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.
வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2006 ஆம் ஆண்டு, சுயேட்சையாக நின்று சென்னை மாமன்ற உறுப்பினரானார். 2007 ஆம் ஆண்டின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்.
இந்நிலையில், சென்னையிலே , ஒரு கட்சியின் மாநில தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது , பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.