“காசு கொடுத்து ஆள் சேர்த்தீங்க... எடப்பாடிக்கு தைரியம் இருந்தால்... ” - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொங்கிய ஓ.பி.எஸ்..
கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான், அது தான் இன்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது என ஓ. பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
கட்சிக்குள் தனது பலத்தை வலுப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்குள் ஆதரவு திரட்டுவது, நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எதிர்கொள்வது மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது.
கட்சியின் அதிருப்தியாளர்கள், எடப்பாடி தரப்பால் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோரை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என ஓ. பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். இவர்களே இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்த பின்பாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக வந்த நிலையில், இரு நீதிபதிகள் பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் வழக்கு ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் கட்சிக்குள் தனது ஆதரவை திரட்டவும், தனது பலத்தை வலுப்படுத்தவே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பன்ருட்டி ராமசந்திரன் “எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் அனைவரும் இங்கு கூறியுள்ளனர்; எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசி இங்குள்ளவர்களுக்கு தான் உண்டு. இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்" என கூறினார்.
இக்கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், “கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான், அது தான் இன்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த தீர்மானத்தை ரத்து செய்ய மனம் இருந்தால் இந்த நாடு மன்னிக்காது.
சோதனை காலத்தில் துணை நின்ற தொண்டர்களுக்கு நன்றி. கட்சியின் தொண்டனாக இருப்பதில் பெருமை என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கி தந்தார்.
ஓபிஎஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது. மனிதாபிமான அடிப்படைக்கூட இல்லாமல் சர்வாதிகார உச்சத்தில் எடப்பாடி இருக்கிறார். எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம். பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்தவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது அவர்களுக்கே தெரியும். அதிமுக வங்கி கணக்கில் வங்கி கணக்கில் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.
கட்சியை கபாலிகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது, இன்றைக்கு என்ன நிலைமை? இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வார்களாம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவார்களாம்..என்ன ஒரு தைரியம்? சாதாரண தொண்டர் நினைத்தாலும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நிற்கலாம் என சட்டத்திருத்தம் செய்வார்களாம் . இந்த ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தும் சக்தி தான் தொண்டர்கள். எங்கள் உயிரே போனாலும் தலைமையை தேர்வு செய்யும் தொண்டர்கள் உரிமையை போக விட மாட்டோம்.
ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாம் சொல்கிறோம், ஒற்றுமையாக இருக்க கூடாது என அவர் சொல்கிறார்.
தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குவேன் என எடப்பாடி சொல்லிப் பார்க்கட்டும், எங்கே போவார் என்றே தெரியாது என குறிப்பிட்டார்.
துணை முதலமைச்சர் பதவி டம்மி என்பதால், அதனை வேண்டாம் என்றேன், 4 ஆண்டுகள் முழுவதும் அனைத்து அதிகாரமும் தனது கைக்குள் வைத்திருந்தவர் எடப்பாடி, 4 ஆண்டுகள் நான் ஏமாற்றப்பட்டேன் என பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுப்பினார். மேலும் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிறுவுவேன் என உறுதியளித்தார்.
மற்றொரு புறம் எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.