அராஜகத்தின் உச்சக்கட்டமாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது - ஜெயக்குமார் காட்டம்
அராஜகத்தின் உச்சக்கட்டமாக திமுக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், கருணாநிதி முதல் தற்போதைய திமுக எம்.பி வில்சன் வரை நீதிமன்றத்தை அவமதித்து பேசுவது திமுகவினருக்கு புதிதான ஒன்று அல்ல என்றும் கூறினார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திமுக எம்.பி வில்சன் பேசிய வார்த்தைகள், திமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காமராஜரின் நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்திலும் அதிமுக சார்பில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அதிமுக கழக அமைப்பு செயலாளர்கள் சி பொன்னையன், டி ஜெயக்குமார், ராயபுரம் மனோ, முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்பு துணை செயலாளருமான க.பாண்டியராஜன், மாவட்ட கழக செயலாளர்கள் அசோக் மற்றும் விருகை ரவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயக்குமார், டாக்டர் ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது,
அராஜகத்தின் உச்சக்கட்டமாக திமுக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், கருணாநிதி முதல் தற்போதைய திமுக எம்.பி வில்சன் வரை நீதிமன்றத்தை அவமதித்து பேசுவது திமுகவினருக்கு புதிதான ஒன்று அல்ல என்றும் கூறினார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கு ஒன்றில் ஆஜரான திமுக எம்பி வில்சன் பேசிய பேச்சு, ஜனநாயக நாட்டில் நீதிமன்றம், பத்திரிகை என எதுவும் இல்லாதது போல் இருப்பதாகவும், இது திமுகவினருக்கு அழிவை நோக்கி செல்லக்கூடிய காலம் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று காந்தி ஜெயந்தி, ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவினர் கலந்து கொள்வது, ஜீவகாருண்ய மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொண்டது போல இருப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் செய்து வரும் ஸ்டாலின் அரசு, முறையாக அந்த பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், குண்டும் குழியுமாக வடிகால்வாய்கள் பணிகளை மேற்கொள்வதால் மழை நீர் முறையாக வெளியேறுவதற்கு போதிய வசதி இல்லாமல் தேங்கி கிடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்வது அறிவுள்ள அரசாங்கத்துக்கு சான்றா? என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.