Kushboo: ''தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்களை நானும் இறங்கி அடிப்பேன்“; நடிகை குஷ்பு பளிச் பதில்
சென்னையில் ஏபிபி நெட்வொர்க் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, தன்னை யாராவது தரம் தாழ்ந்து விமர்சித்தால், அதே பாணியில் அவர்களுக்கு பதிலளிப்பேன் என தெரிவித்தார்.

சென்னையில், ஸ்மார்ட் லைஃப் ஸ்மார்ட் லிவிங் என்ற கருத்தரங்கை ஏபிபி நெட்வொர்க் நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு கலந்துகொண்டு உரையாடினார். அப்போது, சோசியல் மீடியாவில் தன்னை யாராவது தரம் தாழ்ந்து விமர்சித்தால், அவர்கள் பாணியிலேயே அவர்களுக்கு பதிலளிப்பேன் என தெரிவித்தார். அவரது உரையாடலின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு நடிக்கத் தொடங்கிய குஷ்பு
இந்த நிகழ்வில் தன்னுடைய திரை வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொண்ட குஷ்பு, தான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியது குறித்து சுவாரஸ்யமான தகவலை தெரிவித்தார். தான் பாலிவுட் முன்னணி நடிகை ஹேமமாலினியின் வீட்டிற்கு சென்றபோது, முதன் முதலில் இந்தி படத்தில் நடிக்கக் ஒரு இயக்குநர் கேட்டபோது, தினமும் ஐஸ்க்ரீம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று கூறியதாக தெரிவித்தார். அந்த இடத்தில், அப்போதே தான் தனியாக முடிவெடுக்கும் ஒரு சுதந்திரப் பெண்ணாக வளரத் தொடங்கியதையும் குறிப்பிட்டார்.
சின்னதம்பி படத்திற்கு பிறகுதான் தமிழ் கற்றுக்கொண்டேன்
1985-ல் தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன்பிறகு தமிழ் படங்களிலும் நடிக்கத் தொடங்கியதாக தெரிவித்தார் குஷ்பு. திரையுலகில் ஒவ்வொரு இயக்குநரும் தான் தன்னை செதுக்கியதாக அவர் குறிப்பிட்டார். தமிழ் தெரியாமலேயே ஏராளமான படங்களில் நடித்து வந்ததாகவும், சின்னதம்பி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தன்னிடம் ஆட்டோகிராஃப் பெற வந்தவருக்கு, ஆங்கிலத்தில் வித் லவ் குஷ்பு என்று எழுதிக் கொடுத்தபோது, பிரபு தன்னை திட்டி, தமிழ் கற்றுக்கொள்ளும்படி கூறிய பிறகு தான், தமிழை அக்கறையுடன் கற்றுக்கொண்டதாக கூறினார்.
குஷ்புவிற்கு கோவில் கட்டப்பட்டது, குஷ்பு இட்லி போன்றவைகள் வந்தபோது எப்படி உணர்ந்தார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் மிகவும் பெருமையாக உணர்ந்ததாகவும், அதே நேரம் வெற்றியை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் பணிவாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது சின்னத்திரை பயணம் குறித்த கேள்விக்கு, தான் வேலை செய்வதுதான் முக்கியம் என்றும், அது எந்த மீடியமாக இருந்தாலும் பிரச்னை இல்லை என்றும் கூறினார். அதாவது, திரைப்படமா, டிவியா, ஓடிடியா என்பது முக்கியமல்ல, வேலை செய்வதே முக்கியம் என்று தெரிவித்தார். மேலும், தேங்கிவிடாமல் தொடர்ந்து பணிபுரிவதே முக்கியம் என்றும் குஷ்பு குறிப்பிட்டார். தமிழ் முழுமையாக தெரியாது என்பதால் சின்னத்திரையில் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுக்க தான் முதலில் மறுத்ததாகவும், அதன் பிறகு தான் பேசியது தனி ட்ரெண்டாக மாறியதாகவும் தெரிவித்தார்.
“தரம் தாழ்ந்து விமர்சித்தால் இறங்கி அடிப்பேன்“
இன்றைய ஸ்மார்ட் லைஃப் குறித்து பேசிய குஷ்பு, இளைய தலைமுறையினர் சோசியல் மீடியா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும், கவனத்துடன் குறிப்பிட்ட அளவு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், சமூக வலைதளத்தில் தன் மீது வரும் விமர்சனங்களை எப்படி பார்க்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தரமான விமர்சனங்களுக்கு அதற்கேற்ற பதிலை அளிப்பதாக கூறிய குஷ்பு, யாராவது சரியான அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தரம் தாழ்ந்து விமர்சித்தால், அவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே சென்று இறங்கி அடிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.





















