Actor Robo Shankar passes away: ரோபோ சங்கர் மறைவு:அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல், ரசிகர்கள் கண்ணீர்!
சென்னையில் உடல் நலக் குறைவால் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழப்பு.

ரோபோ சங்கருக்கு திடீர் மயக்கம்
சின்னத்திரை நட்சத்திரமும், நகைச்சுவை நடிகருமான ரோபோ சங்கர் (வயது 46) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோபோ சங்கர் கடந்த 16-ம் தேதி மதியம் படப்பிடிப்பில் இருந்த போது திடீரென மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் அவரை சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயக்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் சில நாட்கள் தொடர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்திய நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ரோபோ சங்கருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
ரோபோ சங்கர் மறைவு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சியினர் என பலருக்கும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் X தள பதிவு
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
தமிழிசை சவுந்தரராஜன் X தள பதிவு
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
செல்வப்பெருந்தகை X தள பதிவு
தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் இதயத்தில் நிலைத்து நின்ற நடிகர் திரு.ரோபோ சங்கர் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனது இயல்பான கலை வெளிப்பாட்டாலும் , எளிமையான வாழ்வியலாலும் , அவர் மக்களின் அன்பை பெற்றுச் சென்றார்.
மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களை தொடர்ந்து , தற்போது நடிகர் ரோபோ சங்கர் அவர்களது இழப்பு பேரதிர்ச்சி அளிக்கிறது. கலை துறையில் உள்ள அனைவரும் தங்களது உடல் நலத்தை பேணி காத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
திரு.ரோபோ சங்கர் அவர்களின் இழப்பு திரையுலகிற்கும் , அவரை நேசித்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிடிவி தினகரன் X தள பதிவு
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க நடிகராகத் திகழ்ந்த திரு. ரோபோ சங்கர் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைக் கலைஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அண்ணாமலை X தள பதிவு
தனது நகைச்சுவைத் திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக் கலைஞர், திரு. ரோபோ சங்கர் அவர்களது இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. திரு. ரோபோ சங்கர் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.





















