ECR கடற்கரையை உண்ணும் சுறாக்கள் - கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, இயற்கையில் விளையாடும் அரசியல்
ECR: சென்னை ஈசிஆர் கடற்கரையை தனிநபர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ECR: கட்டிடங்களை எழுப்ப அனுமதி இல்லாத கடற்கரை பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடற்கரையில் உண்ணும் மனித சுறாக்கள்:
வளர்ச்சி எனும் பெயரில் இயற்கையை சீண்டும் விதமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் முடிவுகள், எப்போதும் மனித இனத்திற்கு எதிராகவே அமைந்துள்ளன. அரசு மட்டுமின்றி தனிநபர்களும் இயற்கைக்கு எதிரான ஆக்கிரமிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய நிகழ்வுக்கு மேலும் ஒரு உதாரணம் தான் சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது. முட்டுக்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழைய கரிக்காட்டுக்குப்பம் கிராமத்தில் கடற்கரையில் பல, அடுக்குமாடி கட்டிடம் மற்றும் வரிசையாக பங்களாக்கள் கட்டப்பட்டு வருகின்றன.
Look at the impunity with which they are constructing. Common people have to run from pillar to post to get legitimate permissions and these guys have no fear of law. This is a no development zone and the land is classified as Grama Natham, as per revenue records, which means… pic.twitter.com/8gpsTzYxx0
— S V Krishna Chaitanya (@Krish_TNIE) April 15, 2025
அலைகளின் மடியில் அடுக்குமாடி கட்டிடங்கள்
அங்கீகரிக்கப்பட்ட கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் (CZMP) வரைபடத்தின்படி, மேலே காட்டப்பட்டுள்ள வீடியோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் தளம் CRZ-3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் மேம்பாட்டுத் தடை மண்டலத்திற்குள் (NDZ) வருகிறது. அதாவது கடல்முனையாக இருந்தால், நிலப்பகுதியின் உயர் அலைக் கோட்டிலிருந்து 200 மீட்டர் வரையிலான பகுதியில் எந்தவித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படக்கூடது என ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளின் பழுதுபார்ப்பு அல்லது புனரமைப்பு தவிர, இங்கு எந்த கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படக்கூடாது. மீனவர்கள் மற்றும் கடற்கரை வசதிகள் தேவைப்படும் திட்டங்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் உள்ளன.
கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு:
மேற்குறிப்பிடப்பட்ட எந்த விதிகளுக்கும் சற்றும் அஞ்சாமல், ஏராளமான புதிய கட்டிடங்கள் தாராளமாக கட்டப்பட்டு வருகின்றன. கட்டிடங்கள் கடலுக்கு மிகவும் அருகில் அதாவது அலைகளே வந்து சுற்றுச்சுவரை முட்டும் அளவில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சில கட்டிடங்களின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருக்கம் மற்ற கட்டிடங்களுக்கான பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. கடல் அலைகளால் அரிக்கப்பட்டு தங்கள் கட்டிடங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அதிக எடையிலான பாறைகளைக் கொட்டிகருஞ்சுவற்றையே ஆக்கிரமிப்பாளர்கள் எழுப்பியுள்ளனர். மேலே பகிரப்பட்டுள்ள வீடியோவில் அதனை நீங்கள் காணலாம்.
மீனவர்கள் குற்றச்சாட்டு:
சுனாமி பாதிப்பிற்கு பிறகு, பழைய கரிகாட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மறுவாழ்வு பெற்று, அரசால் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டனர். இப்போது, அதே இடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன என அப்பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நிலப் பதிவுகளின்படி, அந்தப் பகுதி கிராம நத்தம் (குடியிருப்புகளின் கிராம இடம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நிலமற்ற மக்களுக்கானது எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் அலைகள் கடைசியாக முட்டும் உயர் அலைக் கோட்டில் சரியாக அமர்ந்துள்ளன. உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய கட்டிடக் கட்டுமானங்களை இந்த பகுதியில் அமைப்பது சாத்தியமில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இயற்கையை அழிக்கும் இந்த மனித சுறாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
பயமில்லா ஆக்கிரமிப்பாளர்கள்..
இயற்கையை காப்பாற்ற அனைவரும் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு, மீண்டும் பஞ்சப்பை, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரம், ஆக்கிரமிப்பு போன்ற முக்கிய பிரச்னைகளில் கோட்டைவிடுகிறது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. சாதாரண நபர் அறிந்தோ, அறியாமலோ ஒரு சிறிய ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு இருந்தாலும், நிர்வாகம் தனது இரும்புக் கரங்களை கொண்டு அவற்றை அகற்றுகின்றன. தங்களது வாழ்வான சிறிய வீடு கட்டவும், உரிய அனுமதிகளை பெற அரசு அலுவலகங்கள் இடையே ஓட வேண்டியுள்ளது. ஆனால் பணம் படைத்தவர்கள் எந்தவித விதிகளையும் மதிக்காமல், உரிய அனுமதி கூட பெறாமல், தொடவேக் கூடாது என்ற சட்டத்தையும் மீறி கடற்கரை ஓரங்களிலேயே மிகவும் தைரியமாக அடுக்குமாடி குடியிருப்புகளை கூட எழுப்புகின்றனர். இந்த நிகழ்வுகள் அவர்களுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை என்பதையே காட்டுகின்றன.
இயற்கை சீற்றங்கள்:
சிறிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டாலோ அந்த வீடுகளுக்குள் நீர் சென்று விடும் என்பது போல தான் அந்த கட்டிடங்கள் அமைந்துள்ளன. மேலும், சில அடிகள் மட்டுமே கடலில் இருந்து விலகியிருப்பதால், மண் அரிப்பாலும் அந்த கட்டுமானங்கள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புய்ள்ளது. இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இந்த பகுதியில், ஏன் இப்படி ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்ப வேண்டும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
நடவடிக்கை பாயுமா?
சுற்றுச்சூழல் துறை இயக்குநரும் தமிழ்நாடு CZMA உறுப்பினர் செயலாளருமான ஏ.ஆர். ராகுல் நாத், இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். "சென்னை நகரத்தைப் போலல்லாமல், அதிக கண்காணிப்பு இல்லாத இந்தக் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் உள்ளூர் பஞ்சாயத்திடம் கட்டிட அனுமதியைப் பெற்று வேலையைத் தொடங்குகிறார்கள். மீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகளைத் தொடங்குவோம். இதுபோன்ற கட்டுமானங்கள் கடற்கரையை சீர்குலைக்கும்," என்று விளக்கமளித்துள்ளார்.