’நாங்கள்’ திரைப்படம் விமர்சனம்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வன்முறையை வெளிப்படுத்துவதன் தாக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக் கூடியது என்பதை நவீன் உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் பெற்றோர்களிடம் எதிர்கொண்ட வன்முறையை நம் குழந்தைகளிடம் காட்டவில்லை என்றாலும் கோபம் , பிரச்சனைகளில் நாம் கையாளும் விதங்களைப் பார்த்தே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். குறிப்பாக தந்தையை ஒரு முன்னுதாரணமாக பார்க்கும் மகன்கள்.
தந்தை மகன் உறவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் நாங்கள் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முன்னோடியான கலைப்படைப்பு என்று சொல்லலாம்
அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கி , ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ’நாங்கள்' . அப்துல் ரஃபே , மிதுன் . ரித்திக் மோகன் , நிதின் தினேஷ் , பிரார்த்தனா ஶ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மூன்று சிறுவர்கள் கார்த்திக் , கெளதம் , துருவ் மற்றும் இவர்களின் தந்தை ராஜ்குமார் இடையில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு
கார்த்திக் , கெளதம் , துருவ் - மூவரின் தந்தை ராஜ்குமார். ஊட்டியில் பள்ளி ஒன்றை நடத்தி வரும் பிஸ்னஸ்மேன். தொழிலில் பிரச்சனை, மனைவியின் பிரிவு என பிரச்சனைகளை சந்திக்கிறார்.
மூன்று மகன்கள் தந்தையுடன் வாழ்கின்றனர். அவர்களை வீட்டு வேலை செய்ய விடுவது, தவறு ஏதேனும் செய்தால் ஒழுக்கம் என்கிற பெயரில் கடுமையான தண்டனைகளையும் கொடுக்கிறார்.
சிதைந்து போன ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவ்வப்போது தேடிக் கொள்ளும் சின்ன சின்ன ஆசுவாசங்களே நாங்கள் படத்தின் கதை. அம்மாவிடம் இருந்து மகன்களைப் பிரித்து வைத்திருக்கிறார் அவர்.
எப்படியான துன்பம் என்றாலும் குழந்தைகளால் தங்கள் உலகத்தை மீட்டுக்கொள்ள முடியும். ஆனால் அதே குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் போது அவர்கள் இந்த உலகத்தில் எதிர்கொள்ளும் விதமும் அவர்களின் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களுக்கும் இந்த சிறுவயது அழுத்தங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது.
கலா பவஶ்ரீ கிரியேஷன்ஸ் சார்பாக ஜிவிஎஸ் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 18 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது ‘நாங்கள்’