குளம் போல் காட்சியளிக்கும் நிலங்கள்... 2000 ஏக்கர் நெல் பயிர்கள் நாசம்.. கண்ணீரில் செங்கை விவசாயிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை எதிரொலியாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் பெயர்கள், மழையால் பாதிப்படைந்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் எதிரொலியாக, சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர்கள் பாதிப்படைத்துள்ளன.
விவசாயி மாவட்டம் செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் ஒருபுறம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருந்தாலும், அதிகளவு விவசாய நிலங்களைக் கொண்ட மாவட்டமாக உள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு விவசாயங்கள் மேற்கொள்ளப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை சொர்ணவாரி பருவத்தில் சுமார் 32,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
பொதுவாக ஆடி மாதத்தை பொறுத்தவரை அதிகளவு மழை பெய்வது கிடையாது. இந்தநிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, மாலை மற்றும் இரவு வேலைகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வாக இருந்த விவசாய நிலங்களில் முதல் கட்டமாக மழை நீர் புகுந்தது.
நெல் பயிர்கள் பாதிப்பு...
குறிப்பாக மதுராந்தகம் மற்றும் செய்யூர் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள், மழை நீரால் பாதிப்படைந்து முழுமையாக தண்ணீரில் தத்தளித்து வருகிறது . அடுத்த ஒரு சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நாசமாக இருப்பதால், விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதேபோன்று மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் நெல் பயிர்கள் தண்ணீரில், நனைந்து நாசமாகியுள்ளது.
இதுவரை வேளாண்துறை கணக்கெடுப்பு செய்ததில், சுமார் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் முழுமையாக பாதிப்படைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோக மாவட்ட முழுவதும் 938 விவசாயிகளின் 2187 ஏக்கர் பரப்பரவிலான நெல் பெயர்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. முழுமையாக பாதிப்படைந்த விவசாய நிலங்கள் குறித்து மாவட்ட வேளாண்மை துறை கண்காணித்து வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை...
ஏக்கருக்கு சுமார் 35 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் கடைசி நேரத்தில், திடீர் மழை பெய்ததால் செய்வதறியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். எனவே இந்த அசாதாரண சூழ்நிலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம் வழங்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து மாவட்ட விவசாய துறையை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, பாதிப்படைந்த விவசாய நிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை தற்பொழுது நின்றுள்ளதால், விவசாய நிலங்களில் தேங்கின்ற தண்ணீர் வெளியேறி வருகிறது. முழுமையாக ஆய்வுக்கு பிறகு, எவ்வளவு ஏக்கர் நிலம் பாதிப்படைந்தது என்பது குறித்து அரசுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.
நிரம்பிய ஏரிகள்...
மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு நீர் நிலைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சிறு நாகலூர் இரட்டை ஏரி நிரம்பி தண்ணீர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் சென்னை செல்லக்கூடிய வாகனங்கள் இப்பகுதியில் ஊர்ந்து செல்கின்றன. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு நீர் பிடிப்பு பகுதிகள் வேகமாக நிரம்பி வருகிறது.