Blue Star Review: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சிறந்த படம் - ப்ளூ ஸ்டார் படத்தின் விமர்சனம் இதோ!
Blue Star Movie Review Tamil: அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமாரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
S. Jayakumar
Ashok Selvan , Keerthi Pandian · Dhivya Dhuraisamy · Bagavathi Perumal · Shanthnu Bhagyaraj · Kumaravel · Lizzie Antony · Prithvi Pandiarajan.
நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார் (Blue Star). இயக்குநர் ஜெயக்குமார் இதற்கு முன்னர் இயக்குநர் ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த ஜெயக்குமார் இதற்கு முன்னர் Be Aware Of Caste என்ற ஆவணப்படத்தினை மிகச் சிறப்பாகவும் பெரும் நெருக்கடிக்கு மத்தியிலும் காட்சிப் படுத்தியிருப்பார் என்பது கவனிக்கத்தக்கது.
படத்தின் கதை
BLUE STAR படத்தினைப் பொறுத்தவரையில், டிரைலர் பார்த்த ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு ஊர் தெரு மற்றும் காலணித் தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை பேசும் படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினை உண்டாக்கியிருந்தது. ஆனால் படத்தில் இதுமட்டுல் இல்லாமல் ஊர் தெரு மற்றும் காலணி தெரு இணைந்தால் என்ன நடக்கும் என்பதை சிறப்பான திரைக்கதையால் காட்சி படுத்தி உள்ளார் இயக்குநர். காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருப்பதால் லைக்குகளை அள்ளுகின்றார் கீர்த்தி பாண்டியன்.
வசனங்கள் எப்படி?
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இயல்பான காட்சிகளும் அதன் வசனங்களினாலும் நகைச்சுவை சிறப்பாக எடுபட்டுள்ளதால் தியேட்டரில் சிரிப்பும் கைத்தட்டலும் ஒலித்துக்கொண்டே இருந்தது. பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் படத்தில் காட்சிப் படுத்திய இடங்களுக்காகவே இயக்குநருக்கு தனி பாராட்டுகள். பின்னணி இசையில் கோவிந்த் வசந்தா படத்தின் தரத்தை உயர்த்துகின்றார்.
எடுபட்டதா பின்னணி இசை
ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் கேங்ஸ்டர் படத்திற்கு இசையமைப்பதைப் போல் பேஸ் கிட்டாரில் முத்திரை பதித்துள்ளார். படத்தில் 10 நிமிடங்களுக்கும் குறைவாக வரும் ”புல்லட் பாபு” கதாப்பாத்திரம் கைத்தட்டல்களை அள்ளுகின்றது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள குணச்சித்ர கதாப்பாத்திரத்தில் பகவதி பெருமாள் ஸ்கோர் செய்கின்றார். திரைக்கதைக்கு ஏற்ற வசனங்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றது. அசோக் செல்வன் அம்மாவாக நடித்துள்ள லிசி ஆண்டனியின் காட்சிகளுக்கும் தம்பியாக நடித்துள்ள பிரித்விராஜன் இடையே நடக்கும் சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்கும் நல்ல வரவேற்பு.
படத்தில் உள்ள அரசியல்
படத்தின் மையம் கிரிக்கெட். கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த படம் ரசிக்கும் படியாக இயக்கியுள்ளார் இயக்குநர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்குநர் தான் நம்பும் அரசியலை சிறப்பாக எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல் காட்டியுள்ளார். இதற்கு முன்னர் வந்த ஊர் தெரு மற்றும் காலணி தெரு அரசியலை பேசிய படங்கள் இவர்களுக்கு இடையேயான பிரச்னைகளை பேசியிருந்தது. காலணி தெருவில் இருப்பவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அவமானங்கள் குறித்து எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அது ஊர் தெருவில் இருப்பவர்களுக்குப் புரிந்ததா என்ற கேள்விக்குறி இருந்துவந்தது. ஆனால் இந்த படத்தில் ஊர் தெருவில் உள்ள சாந்தனுக்கு ஏற்படும் அவமானம் அதனால் சாந்தனுக்குள் ஏற்படும் மாற்றம் ரசிக்கும்படியாக இருந்தது.
படம் முழுக்க முழுக்க கற்பனையே எனக் கூறிவிட்டு மறைந்த அரசியல் தலைவர் பூவை மூர்த்தி கதாப்பாத்திரம் ஒரு இடத்தில் காட்சிபடுத்தப்பட்டிருப்பது கேள்வியை எழுப்புகின்றது. க்ளைமேக்ஸ்க்கு முன்னதாக வரும் காதல் காட்சிகள் பார்ப்பதற்கு அழகியலாக இருந்தாலும் படத்தின் வேகத்தை சற்றே குறைப்பதாக உள்ளது. பா. ரஞ்சித் தயாரிப்பில் முத்திரை பதித்த படங்களின் வரிசையில் இந்த படத்திற்கு கட்டாயம் இடம் கிடைக்கும். மொத்தத்தில் ப்ளூ ஸ்டார் வொர்த் டூ வாட்ச் என்பதை விடவும் வொர்த் டூ ரீ-வாட்ச் என்கின்றது ஏபிபி நாடு.