Protect Your Lungs: குளிர்காலத்தில் நிமோனியாவை தடுப்பது எப்படி? நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!
காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நுரையீரலை ஆரோக்கியமுடன் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
குளிர்காலம் இதமான சூழலை வழங்குவதோடு காற்றில் உள்ள ஈரப்பதம் பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதற்கும் காரணமாக அமையும்.
குளிர்காலத்தில் நிமோனியா பாதிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குளிர்காலத்தில் சுவாகக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம். காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நுரையீரலை ஆரோக்கியமுடன் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
நிமோனியா
நுரையீரலில் ஏற்படும் ஒரு வகையான தொற்று நிமோனியா, இது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். குளிர் காலத்தில் நிமோனியா அதிகமாக காணப்படுகிறது.காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள் சுவாசிக்கும்போது நுரையீரலைத் தாக்கி நோய் ஏற்பட காரணமாக அமைகிறது. தீவிர சுவாச நோயாக பார்க்கப்படுகிறது நிமோனியா. நுரையீரல்களில் அல்வியோலி எனப்படும் மிகவும் சிறிய காற்றுப்பைகள் தொற்று பாதிப்பினால் நிமோனியா உண்டாகிறது. மேலும் இந்த காற்று பைகளில் அதிக நீர் அலல்து சீழ் கோர்த்து கொண்டு ஒருகட்டத்தில் காற்றுப் பரிமாற்றமே இல்லாமல் போகும். இதனால் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படும்.
இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் அஞ்சலி (Anjali R Nath) நிமோனியா குறித்து கூறுகையில், “ஆரோக்கியம் இல்லாத உணவுகள், தூக்கமின்மை, மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உடல்நலம் கடுமையான பாதிக்கப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது அவர்களுக்கு நிமோனியா ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நிமோனியா பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரலின் செயல்படும் திறனை குறைந்துவிடும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் மற்றும் குளிரால் அவதிப்படும் நிலை உண்டாகிறது. நிமோனியா தீவிரமானால் ஆக்ஸிஜன், ரத்த அழுத்தம் குறைந்து நுரையீரல் செயல்படாமல் நின்று போகும் அபாயமும் உண்டு. வென்டிலேட்டர் ட்ரீட்மென்ட் தேவைப்படலாம். நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் தீவரத்தை பொறுத்து உடல்நலனில் கேடு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அறிகுறிகள்
- அதிக சளியுடன் கூடிய இருமல்
- காய்ச்சல் அதிகமாக இருப்பது
- தலைவலி
- பசியின்மை
- வாந்தி உணர்வு / வாந்தி
- சுவாசிக்கும்போதும் நெஞ்சு பகுதியில் வலி
- அதிக குளிர்வாக உணர்வது அல்லது அதிகமாக வியர்க்கும்
- எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும் நடக்காமால இருந்தாலும் மூச்சுத் திணறல் ஏற்படும்
- அதீதமாக உடல் சோர்வுடன் இருப்பதாக உணர்வது.
இது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் . நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருக்கும் நெருங்கிய நபர்களுக்கும் தும்மல் அல்லது இருமல் மூலம் இந்த தொற்று பரவும் அபாயம் அதிகம். சிறு குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு நிமோனியா ஏற்படும் ஆபத்து அதிகம்.
வைட்டமின் சி:
நிமோனியா ஏற்படாமல் தடுக்க வைட்டமின் -சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆரஞ்சு தவிர எலுமிச்சை, பெர்ரி மற்றும் கிவி போன்ற பிற சிட்ரஸ் பழங்களையும் சாப்பிடலாம். இருப்பினும் தொண்டை புண் பிரச்னை உள்ளவர்கள் சிட்ரஸ் வகை பழங்களை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எப்படி தடுப்பது?
நிமோனியாவை நோயை தடுக்க சிலவற்றை மருத்துவ உலகம் பரிந்துரைத்தாலும் சுற்றுப்புறத்தில் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்வது, சுத்தமான தண்ணீரை பயன்படுத்துவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியமாகும். அதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நிமோனியா ஏற்படுவதில் இருந்து தடுக்கலாம் என்கிறார் டாக்டர் அஞ்சலி.
நிமோனியாவை தடுப்பது குறித்து மருத்துவர் அஞ்சலி கூறுகையில், “ ஆரோக்கியமான உணவுமுறையை பினபற்ற வேண்டியது மிகவும் அவசியம். காய்கறி, இறைச்சி, பழங்கள், தானிய வகைகள் என ஆரோக்கியமான உணவுகள், துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். சரிவிகித உணவோடு சீரான உடற்பயிற்சியும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.” என்று குறிப்பிடுகிறார். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். நிமோனியாவல் பாதிக்கப்பட்டவர்கள் சுவாச பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு, குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.