Vinayagar Chathurthi Pooja: விநாயகர் சதுர்த்தியும் ,பூஜை வழிபாட்டு நேரமும்.. எல்லாமே இனிப்பான தகவல்..
Vinayagar Chaturthi 2022 Pooja Procedure: விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையாரை வழிபடுவதற்கு சுப முகூர்த்த நேரம் வரும் ஆகஸ்ட் 31 காலை 11.04 முதல் மதியம் 01.37 வரை.
Ganesh Chaturthi Pooja Procedure in Tamil:
பூஜை நேரம்..
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி என்பது ஆவணி மாதம் வருகின்றது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி 15ஆம் நாள் வருகிறது. விநாயகர் அவதரித்த அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டுத் தான் தொடங்க வேண்டும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை.
அதன்படி, இந்த ஆண்டில், விநாயகர் சதுர்த்தி நாளின் பிள்ளையாரை வழிபடுவதற்கு சுப முகூர்த்த நேரம் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காலை 11.04 முதல் அன்றைய தினம் மதியம் 01.37 வரை ஆகும். இந்த சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள். இந்த நாளில் விநாயகர் உங்களுக்கு கேட்ட வரத்தை அள்ளி கொடுப்பார் என்பது காலம் காலமாக இந்து மக்களின் நம்பிக்கை ஆகும்.
இந்த விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது விநாயகரை வழிபடும் பிரிவினை கணபதியம் என்று சொல்லுவார்கள் அந்த கணபதியத்தை தன்னகத்தில் வலுவாக எடுத்துக் கொண்ட ஒரு இந்திய மாநிலம் மகாராஷ்டிராவாகும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொண்டாடப்பட்டாலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொண்டாடப்படும் அளவிற்கு வெகு விமர்சையாக வேறு எங்கும் கொண்டாடப்படுவதில்லை. அதைப்போலவே மராட்டிய மன்னர்கள் முற்காலத்தில் இந்தியாவில் அவர்கள் முன்பு ஆட்சி புரிந்த பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு குதூகலம் மற்றும் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லை. விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகிறதோ அதைவிட அதிகமாக வட இந்தியாவில் அதிகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தெருக்கள் எங்கும் வண்ண கோலங்கள், விநாயகர் சிலைகள் என்று திருவிழாவாக போல காட்சியளிக்கும்.
அதே போல தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே பெரிய விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும்.இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி வந்தாலே ஒரு பத்து நாள் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லை.
விதவிதமாக உணவானது தயார் செய்யப்பட்டு, விநாயகருக்கு படைக்கப்படும்.அப்பொழுது எங்கே பார்த்தாலும் மேளதாளங்கள் விநாயகர் குறித்த பாடல்கள் என கொண்டாட்டத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
பிரசாதம்..
விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, கொழுக்கட்டை. கொழுக்கட்டை படைப்பதற்கு முன்னோர்களால் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. இதுவே கொழுக்கட்டையின் மூலம் நமக்கு சொல்லப்பட்ட தத்துவமாகும்.
தேங்காய், வெல்லப்பாகு மற்றும் அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் மேற் சொன்ன உண்மையும் உள்ளதாக பக்தர்களால் நினைக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் விநாயகருக்கு கொழுக்கட்டை ஆனது விநாயகர் சதுர்த்தியன்று படைக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை செய்ய ஒரு சில வழிபாடு முறைகள் செய்யப்படுகிறது.
அது எத்தகைய முறைகள் மற்றும் பூஜை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்ய பிள்ளையார், அரிசி, மஞ்சள், குங்குமம், சந்தனம், அறுகம்புல்,கற்பூரம், விநாயகருக்கு உடுத்த ஒரு பட்டுத் துணி அல்லது வெள்ளை கதர் துணி. பூ, அருகம் புல், எருக்கம்பூ மாலை, தேங்காய், வாழைப்பழம் மற்றும் வெற்றிலைப் பாக்கு போன்ற பூஜை பொருட்கள் வழிபட வைக்க வேண்டும்.
விநாயகருக்கு கொழுக்கட்டை மற்றும் ஏனைய பொருட்களை வைத்து படையல் இடுவதற்கு முன்பு ஒரு சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு சிறு பலகையில் சந்தனம் குங்குமம் இட்டு அதில் மஞ்சளினால் செய்த மஞ்சள் விநாயகரை வைத்து விநாயகர் சதுர்த்தி பூஜை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று வணங்கிய பின்னர் மண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஒரு பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து, கோலமிட்டு, அதன் மீது வைக்கவும்.
அவருக்கு மஞ்சள் அல்லது சந்தனத்தால் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் இடுங்கள். பின்பு நம் வசதிக்கு தகுந்தார் போல் வாங்கி வந்திருக்கும் பட்டு வஸ்திரத்தையோ அல்லது கதர் துணியோ அவருக்கு வேட்டி போன்று கட்டிவிட வேண்டும். பின்பு அவருக்கு பிடித்த எருக்கம் மாலை பூவை அணிவிக்க வேண்டும்.
பிறகு மற்றைய பூ மாலைகள் வில்வம் என அனைத்தையும் அவருக்கு சூட்ட வேண்டும்.பின்னர் அழகிய வண்ணங்களில் கிடைத்த ஒரு குடையை அவருக்கு பின்புறமாக சாத்தி வைக்க வேண்டும். நம் சமையலறையில் விதவிதமாக தயாரித்த, கொழுக்கட்டை சுண்டல் ஆகியவற்றை விநாயகர் சிலையின் முன் ஒரு இலையை இட்டு அதில் பிரசாதமாக படைக்க வேண்டும்.
அதே இலையில், ஒரு புறத்தில் அவர் விரும்பி சாப்பிடுகின்ற அவல், பொரிகடலை மற்றும் வெள்ளம் ஆகியவற்றையும் வைத்து சீரும் சிறப்புமாக வையுங்கள் என்று மனதார உங்கள் வேண்டுதல்களை அவரிடம் வைத்து காலை 11.04 முதல் அன்றைய தினம் மதியம் 01.37 மணிக்கு உள்ளாக, தீபாராதனை காண்பிக்க வேண்டும். பின்னர் நீங்கள் தயாரித்த சுண்டல், கொழுக்கட்டை,அவல் மற்றும் பொரிகடலை ஆகியவற்றை உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட வேண்டும்.