(Source: ECI/ABP News/ABP Majha)
வாழ்க்கையின் கோரமுகம்.. காதல் பெயரில் தொடர் ஏமாற்றம்.. மனம் திறந்த திருநங்கை கட்ரீனா!
காதலைச் சொல்லி எங்களை ஏமாற்றாதீர்கள் எனக் கூறியுள்ளார் திருநங்கை கட்ரீனா. தன்னைப்போன்ற திருநர் நிலைமை பற்றி ஒரு யூ ட்யூப் சேனலுக்கு மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
காதலைச் சொல்லி எங்களை ஏமாற்றாதீர்கள் எனக் கூறியுள்ளார் திருநங்கை கட்ரீனா. தன்னைப்போன்ற திருநர் நிலைமை பற்றி ஒரு யூ ட்யூப் சேனலுக்கு மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
”என் பெயர் கட்ரீனா. என் சொந்த ஊர் சேலம். இப்போ சென்னையில் இருக்கிறேன். என்னைப் போன்ற திருநங்கைகளின் மேம்பாட்டுக்கான அமைப்பில் இருக்கிறேன். திருநங்கைகளுக்கு பாலின சமத்துவம், உடல்நலம், தொழில்பயிற்சி என்று பலவகையில் வழிகாட்டும் பணியை செய்து வருகிறேன். முதன்முதலில் 9வது படிக்கும்போது தான் என் பெண்மை எனக்கு ஆழமாகத் தெரிந்தது. அப்போது தான் எனக்கு பப்பி லவ் வந்தது. என்னுடன் படித்த செல்லமணி என்ற மாணவனை நான் காதலித்தேன். அந்த வகுப்பே என்னை கிண்டல் கேலி செய்ய செல்லமணி மட்டும் என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்வான். அதனால் காதல் வயப்பட்டேன். ஒருமுறை செல்லமணி உடம்புக்கு முடியாமல் ஸ்கூலுக்கு வரவில்லை அன்றைக்கு என் மனம் பட்டபாடுதான் காதல் என்பதை உணர்ந்தேன்.
ஆனால், ஒருக்கட்டத்தில் செல்லமணி நான் பெண் அல்ல என்பதால் புறக்கணித்தான். அவனிடம் சவால்விட்டே உன் முன்னால் முழுசா ஒரு பெண்ணாக வந்து நிற்பேன் என்று சொன்னேன். 10வது முடித்தவுடனேயே வீட்டைவிட்டு ஓடினேன். அதன்பின்னர் பல இடங்களில் வாடினேன். புதுச்சேரி, சென்னை, மும்பை என சுற்றாத இடமில்லை. வாழ்க்கையின் கோர முகத்தைப் பார்த்தேன். அப்போது தான் இளங்கோ அறிமுகமானான். என்னை அவ்வளவு புரிந்து கொண்டவனாக அன்பானவனாக நடந்து கொண்டான். ஊரில் யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டான். என்னைக் கூட்டிக் கொண்டு அவன் செல்லாத இடமில்லை. எங்குமே என்னை நான் ஒரு திருநங்கை என்று நினைக்கவிட மாட்டான். நான் அவனுடன் இருக்கும்போதுதான் பெண்ணாக உணர்ந்தேன். ஒருநாள் நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சென்றோம். அப்போது அங்கு என் நெற்றியில் குங்குமம் வைத்து என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான்.
நானும் சரியென்றேன். அவன் என் கழுத்தில் தாலி கட்டினான். 4 ஆண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். இளங்கோ என் உயிராக இருந்தான். வாழ்க்கை நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. திடீரென அவன் வீட்டில் உள்ளோர் அவனுக்குக் கல்யாணம் செய்துவைக்கப்போவதாகக் கூறினார்கள். அவனும் என்னிடமிருந்து பிரிந்தான். நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானேன். எனக்கு உலகமே இருண்டுபோனது. தற்கொலை எண்ணங்கள் வந்தன. மூன்று மாதங்கள் மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டேன். என் சக திருநங்கைகள் எல்லோருமே சொல்வார்கள், திருநங்கைகள் காதல், கல்யாணம் எல்லாம் கொஞ்ச காலம்தான் என்று. நான் அவர்களிடம் எல்லாம் நானும் இளங்கோவும் 60, 70 வருடம் வாழ்வோம் என்பேன். ஆனால் 4 ஆண்டுகளிலேயே எல்லாம் முடிந்தது. என் மீது அவ்வளவு காதலாக இருந்தவனுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
நாங்கள் ஆண் அல்ல, பெண் அல்ல ஆனால் நாங்கள் மனிதர்கள் தானே. எங்களுக்கு உணர்வும், உணர்சியும் ஒன்று தானே. அப்படியிருக்க எங்களை காதலைச் சொல்லி ஏமாற்றாதீர்கள். ஒரு ஆணோ பெண்ணோ காதலில் தோல்வியுற்றால் நண்பர்கள், தோழிகள், குடும்பத்தினர் இருப்பார்கள். அவர்களை ஆறுதல் சொல்லி தேற்றுவார்கள். ஆனால் எங்களுக்கு யார் இருக்கிறீரார்கள். எங்கள் சக திருநர்கள் கூட வெற்றியடைந்த காதல் கதை கொண்டவர்களாக இல்லை. அதனால் எங்களை ஏமாற்றாதீர்கள். எங்கள் வலி ரொம்பவே அதிகம்.