Rishikesh to Kanyakumari: என்னது வெறும் 5000 ரூபாயா? ரிஷிகேஷ் முதல் கன்னியாகுமரி வரைக்கும் சூப்பர் சுற்றுலா போலாமே..
தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் ரிஷிகேஷ் வரை உள்ள பழமைவாய்ந்த, அழகிய இயற்கை வனப்புமிக்க பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.
குளிர்காலம் தொடங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பலரும் முக்கிய சுற்றுலா தலங்களை நோக்கி பயணிப்பது வழக்கம். ஆகவே இம்முறை இலகுவான முறையில் ,குறைந்த பண செலவில் எவ்வாறு முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது என பார்க்கலாம்..
ரிஷிகேஷ் முதல் கன்னியாகுமரி வரை உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்கான போக்குவரத்து செலவு 5000 ரூபாய்க்குள்தான் இருக்கும் என கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து ரிஷிகேஷ் வரை செல்வதற்கான போக்குவரத்து சாதனமாக ரயிலை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. சுலபமான மார்க்கமாகவும் குறைந்த செலவிலும் ரயில்களின் மூலம் இந்த சுற்றுலா தலங்களை சென்று பார்வையிடலாம்.
இந்த குளிர்காலத்தில் 5000 ரூபாய் பட்ஜெட்டில் எவ்வாறான இடங்களை சென்று பார்வையிடலாம் என பார்க்கலாம்.
பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, பட்ஜெட்டுக்கு ஏற்ற மற்றும் பயனுள்ள பயணத் திட்டத்தை வகுப்பதுதான். சுற்றுலா செல்வது என்றால் பொருட்செலவையும், பணச்செலவையும் குறைப்பது என்பது கஷ்டம்தான். ஆகவே இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை சென்று பார்வையிட குறைந்த செலவிலான பட்ஜெட்டுகளுக்கு கட்டுபடியாகும் பயணம் ரயில் பயணம் மட்டும்தான்.
இந்தியாவில் உள்ள அழகான மலைப் பிரதேசங்கள் ,அழகிய இயற்கை வனப்புமிக்க இடங்களை கண்டு ரசிக்க ரயிலில் பயணிப்பதை மிகவும் சிறந்ததாகும்.
ரிஷிகேஷ்:
புனிதமான கங்கை நதியின் தாயகம்தான் இந்த ரிஷிகேஷ் ஆகும். சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக இது விளங்குகிறது. அதிலும் சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் இந்த ரிஷிகேஷ் அமையப்பெற்றுள்ளது. இந்த இடம், ஒயிட் வாட்டர் ராஃப்டிங்கிற்கு பிரபலமானது எனக் கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து சுமார் 225 மைல் தொலைவில் உள்ளது ரிஷிகேஷ்.
டெல்லியில் இருந்து தனியார் பேருந்து, வால்வோ அல்லது டாக்ஸியில் சென்றடையலாம். ஒரு வழி டிக்கெட்டின் விலை 200 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. கூடுதலாக, ஆசிரமங்கள் உட்பட தங்குவதற்கு பல இடங்கள் உள்ளன. குறைந்த செலவில் தங்கும் அறைகள் இருப்பதாகவும் , ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்கு ஒரு அறையை பதிவு செய்துகொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
கசௌலி:
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில், 1900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்திய இராணுவப் பாசறை நகரம்தான் இந்த கசௌலி. கசௌலியின் பிரமிக்க வைக்கும் மலைவாசஸ்தலக் காட்சிகளை அனுபவிக்க வார நாட்களில் அங்கு செல்வதே சிறப்பு என கூறப்படுகிறது. கசௌலிக்கு இலகுவான, செலவு குறைந்த வழியாக டெல்லியிலிருந்து கல்காவிற்கு ரயிலில் சென்று பின்னர் ஷேர் டாக்ஸியில் கசௌலியை சென்றடையலாம்.
இது மொத்த சுற்றுலாப் பயணச் செலவில் 1500 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகைக்குள்ளேயே வரும் என சொல்லப்படுகிறது. இங்கு ஆயிரம் ரூபாய்க்குள் தங்கும் அறைகளை பதிவு செய்துகொள்ளலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல் விடுமுறையின்போது சற்று அதிகமாக செலவிட விரும்பினால் ஆக கூடுதலாக 2500 ரூபாய் வரை செலவாகும் என கணிக்கப்படுகிறது .
ஹம்பி:
ஜோர்டான் மற்றும் பெட்ரா நகரங்களைப் போலவே ஹம்பியும் அதன் பழமையான வரலாற்றை தன்னகத்தே கொண்ட நகரமாகும். இங்கே, குறைந்த விலையில் தங்கும் இடத்தை எளிதாகக் காணலாம். மேலும், பயணச் செலவு மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. ஹம்பி என்றாலே பிரசித்தி பெற்ற விஜயநகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான் நினைவுக்கு வரும். விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக , ஹொய்சள கட்டிடக்கலையின் அழகை பறைசாற்றிக் கொண்டிருக்கும் பழமை வாய்ந்த வரலாற்று இடங்களில் ஒன்றுதான் ஹம்பி.
ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நகரமாக இந்த ஹம்பி விளங்குகிறது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூரிலிருந்து 350 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஹம்பிக்கு அதன் புராதன பழமையை காண ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கசோல்:
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மிகவும் அழகிய வனப்புமிக்க மலைப்பிரதேசம்தான் இந்த கசோல். இதன் அழகில் மயங்கியே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வர்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் ஹிப்பி பாணியிலான உணவகங்கள் மற்றும் பப்களை அனுபவிப்பதற்காக அங்கு பயணம் செய்கிறார்கள். இங்குள்ள வலுவான யூத வரலாறு மற்றும் மரபுகள் காரணமாக கசோலை இந்தியாவின் குட்டி இஸ்ரேல் என அழைக்கின்றனர். கசோல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கண்கவர் சுற்றுலா தலமாகும். கசோல், கோவாவை நினைவூட்டுவதாக அமைந்தாலும் அழகான மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு ரம்யமான பகுதியாகும். மிகவும் குறைந்த அளவிலான பட்ஜெட்டில் இந்த ஊருக்கான சுற்றுலாவை மேற்கொள்ளலாம். இங்கு செல்ல ஒரு வழி பயணத்திற்கு 800 ரூபாயிலிருந்து பஸ் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறது.மணாலியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதியும் இருக்கிறது.
கன்னியாகுமரி:
தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகவும் இயற்கை எழில் மிக்க பகுதி தான் இந்த கன்னியாகுமரி. திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கன்னியாகுமரி, பெரும்பாலான சுற்றுலாப் பணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருக்கிறது.
திருவள்ளுவர் சிலை,விவேகானந்தர் நினைவு மண்டபம், விவேகானந்தர் பாறை, பத்மநாபபுரம் அரண்மனை,வட்டகோட்டை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், கன்னியாகுமரி கோயில், சித்தாறல் மலைக்கோயில் ,நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில், குமரி கடற்கரை, சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் என கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல இடங்கள் காணப்படுகின்றன. முக்கியமாக இந்த விவேகானந்தர் பாறையில் காலையில் உதிக்கும் அந்த சூரியனைக் காணவே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள்.
திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்ல ஒரு வழி பேருந்து டிக்கெட் சுமார் 250 ரூபாய் வரை செல்லும் என கணக்கிடப்படுகிறது. அவ்வாறே மிகவும் குறைந்த விலையில் 800 ரூபாய் முதல் ஹோட்டல் அறைகளை அங்கு பதிவு செய்து கொள்ளலாம்.