Potato Chips: வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பது எப்படி? ரொம்ப ஈசிதான்..!
அனவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சிப்ஸ்-ஐ வீட்டிலேயே எப்படி மிக எளிதாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
முதலில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு நாம் கடைகளில் சிப்ஸ் போடும் உருளைக்கிழங்கு என்று கேட்டு வாங்க வேண்டும். சற்று பெரிய அளவில் நீர்ச்சத்து குறைவாக இருக்க கூடிய உருளைக்கிழங்கு தான் சிப்ஸ் போடுவதற்கு ஏற்றது. இது தான் சாப்பிடுவதற்கு மொறுவென இருக்கும். நாம் பொரியலுக்கு பயன்படுத்தும் உருளை கிழங்கை வைத்து சிப்ஸ் போட்டால், சிப்ஸ் நமத்துப் போனதை போன்று இருக்கும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ்:
சிப்ஸ் போடக்கூடிய பெரிய அளவிலான உருளைக்கிழங்குகளை எடுத்து முதலில் தோல் சீவி அதன்பின்பு, சிப்ஸ் லேஸ் சீவி எடுக்கும் கட்டையை பயன்படுத்தி, உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். சீவிய உருளைக் கிழங்கு ஸ்லைஸை தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். ( ஸ்லைஸ் மிகவும் மெல்லியதாகவும், அதிக தடிமனாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்:
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிய தக்காளி – 2, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், சர்க்கரை – 1 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், சிறிய துண்டு இஞ்சி, ஒரு பல் பூண்டு, சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி கொஞ்சமாக தண்ணீரை விட்டு ரசம் போல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் தண்ணீரில் சீவி போட்டு வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, நன்றாக தண்ணீர் வடித்து விட்டு, தயாராக இருக்கும் மசாலா ரசத்தில் உருளைக்கிழங்குகளை ஊற வைத்து, ஃப்ரீஸரில் 15-ல் இருந்து 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். மசாலா கலந்த உருளைக்கிழங்கை, ஃப்ரீசரில் வைத்தால், மசாலாவை சீக்கிரமே உருளைக்கிழங்கு உறிஞ்சிக் கொள்ளும்.
20 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கை ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டு, மசாலா தண்ணீரில் இருக்கும் உருளைக்கிழங்கை, ஒவ்வொன்றாக எடுத்து காட்டன் துணியின் மேல் உலர வைக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து, சிப்ஸ் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உலர்ந்த உருளைக்கிழங்குகளை எடுத்து பக்குவமாக பொரித்தெடுத்தால், மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.
அபார சுவை:
சிப்ஸ் உடன் கொஞ்சமாக சாட் மசாலா, கொஞ்சம் உப்பு இந்த இரண்டு பொருட்களையும் கலந்து எடுத்து, இந்த உருளைக்கிழங்கு சிப்ஸின் மேலே தூவி சாப்பிட்டால் இதன் சுவை அபாரமாக இருக்கும். உங்களுக்கு மசாலா, தேவை இல்லை என்றால், உப்பு தண்ணீரில் உருளைக்கிழங்கைப் போட்டு 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து விட்டு அதன் பின்பு தண்ணீரை நன்றாக வடிகட்டி உருளைக்கிழங்கு உலர வைத்து, நேரடியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் உப்பு சேர்த்த சுவையான மொறுமொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும்.