Plastic Water Bottle Safety Concerns: என்னயா சொல்றீங்க? பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடித்தால் இவ்வளவு ஆபத்துகளா?
Plastic Water Bottle Safety Concerns: பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் குடிப்பதால், ஏற்படும் அபாயம் தொடர்பான எச்சரிக்கைகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Plastic Water Bottle Safety Concerns: பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் குடிப்பதால், ஏற்படும் அபாயம் தொடர்பான ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
தண்ணீர் பாட்டிலில் பிளாஸ்டிக் துகள்கள்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தண்ணீர் என்பது அத்தியாவசியம். ஆனால் அவர்கள் எதில் சேமித்து தண்ணீரை குடிக்கிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை. தண்ணீர் வணிக பொருளானதை தொடர்ந்து, பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நீரை தான் அருந்துகிறோம். இப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடித்து வந்தால், பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
உடலில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்:
பிளாஸ்டிக் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பாட்டில்கள் விஷயத்தில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பாட்டில்களில் உள்ள தண்ணீரைக் குடிப்பதால் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உடலுக்குள் சேர்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீரின் மூலம் உடலுக்குள் சேர்வதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அவை உடல் செல்களை சேதப்படுத்தும். அவை திசுக்களில் நுழைந்து உடல்நலப் பிரச்னைகளை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பாட்டிலில் லட்சக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள்:
கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் குடிநீரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு செய்துள்ளது. பாட்டில் தண்ணீரில் உள்ள துகள்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் புதிய இமேஜிங் நுட்பத்தைப் பயன்படுத்தினர். அதில் அதிர்ச்சியூட்டும் விஷயங்களை கண்டுபிடித்தனர். அதன்படி, ஒரு லிட்டர் தண்ணீரில் சராசரியாக 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டறிந்தனர். அவற்றில் 90 சதவீதம் நானோ பிளாஸ்டிக்குகள். இவற்றை உட்கொள்வதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது நிச்சயமாக கவலைக்குரிய விஷயம், ஏனென்றால் அவை உடலில் நுழைந்து செல்கள் மற்றும் திசுக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.
நுரையீரலில் குவியும் பிளாஸ்டிக் துகள்கள்:
இந்த துகள்கள் ரத்தம், நுரையீரல், குடல், மலம் மற்றும் ஆண்களின் விந்தணுக்களிலும் குவிந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை நுரையீரல் புற்றுநோய் மற்றும் ரத்த புற்றுநோய் போன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, அவை இனப்பெருக்க திசுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் சிலருக்கு ரத்த இன்ப பிரச்சனைகள் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் இந்த ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை முடிந்தவரை தவிர்க்க முயலுங்கள்.
பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்ன?
கண்ணாடி பாட்டில்கள், களிமண் பாட்டில்கள் அல்லது மற்ற உலோக பாட்டில்களை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். ஆரோக்கியமாக இருக்க, பாட்டில்கள் விஷயத்தில் திட்டவட்டமான மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இல்லையெனில் உடல் நலத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
(குறிப்பு: பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மற்றும் சுகாதார இதழ்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் உங்கள் புரிதலுக்காக வழக்கம் போல் இங்கே தரப்பட்டுள்ளன. இந்த தகவல் மருத்துவ பராமரிப்பு அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. உடல்நலம் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு 'ஏபிபி நாடு' மற்றும் 'ஏபிபி நெட்வொர்க்' எந்தப் பொறுப்பையும் ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.)