Friendship Day 2025 Date: மச்சி.. சர்வதேச நண்பர்கள் தினம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோ..!
International Friendship Day 2025 Date: இந்தியாவில் சர்வதேச நண்பர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? எதனால் கொண்டாடப்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஒரு மனிதனுக்கு அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்கள், அண்ணன், தம்பி என்று பல உறவுகள் இருந்தாலும் ரத்த சொந்தம் இல்லாத நண்பன் என்ற உறவு மிக மிக உயரியது ஆகும். நல்ல நண்பன் என்பவன் சோகத்தில் துணை நிற்பவனாகவும், நல்ல வழிகாட்டியாகவும், தவறான பாதையில் செல்லும்போது நம்மை திருத்துபவனாகவும் இருக்கிறான்.
சர்வதேச நண்பர்கள் தினம் எப்போது?
அப்பேற்பட்ட நட்பை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆகஸ்ட் முதல் ஞாயிறு நாளை மறுநாளான 3ம் தேதி வருகிறது. இந்த நாளை உலகெங்கும் சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
கொண்டாடப்படுவது ஏன்?
உலகின் பாரம்பரிய மற்றும் புகழ்பெற்ற வாழ்த்து அட்டை நிறுவனம் ஹால்மார்க். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜோய்ஸ் ஹால். அமெரிக்காவைச் சேர்ந்த இவரே நண்பர்கள் தின கொண்டாட்டத்தை தொடங்கியவர். ஆனால், தேதி ஏதும் குறிப்பிடாமலே இவர் இதை தொடங்கினார். தனது வியாபார யுக்திக்காகவும், வாழ்த்து அட்டை விற்பனைக்காகவும் இதை அவர் தொடங்கினார்.
அவரது இந்த நண்பர்கள் தின கொண்டாட்டம் அமெரிக்காவை கடந்து உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், சர்வதேச அளவில் ஜுலை 30ம் தேதியையே நண்பர்கள் தினமாக 2011ம் ஆண்டு முதல் ஐநா அங்கீகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையையே சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடடுவதே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஜுலை 30 மற்றும் ஆகஸ்ட் 3 ஆகிய இரண்டு நாட்களும் நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நல்ல நண்பன்:
இந்த நண்பர்கள் தினத்தன்று நண்பர்கள் தங்களுக்குள் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக் கொள்வார்கள். பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம் என அனைத்து இடங்களிலும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நல்ல நண்பர்கள் அமைந்து விட்டால் கடினமான நேரத்திலும் சரியான முடிவுகளை எடுக்க இயலும். இதன் காரணமாகவே விவேகானந்தர் உன் நண்பர் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன் என்று கூறினார். இந்தியாவில் நட்பை மையமாக வைத்து ஏராளமான வெற்றிப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நட்பு என்பதை உறவிற்கும் மேலாக உன்னதமான ஒன்றாக கருதுகின்றனர்.





















