Christmas Cake: கேக் இல்லாத கிறிஸ்துமஸா? எளிமையாக குக்கரில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி இதோ..
ஆரம்ப காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு plum porridge எனப்படும் பிளம் புட்டிங் தயாரித்து உண்ணும் பழக்கமே இருந்து வந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டத் தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார்களுடன் அலுவலகங்கள் தொடங்கி வீதிகள் வரை மிளிரத் தொடங்கி விட்டன.
ஆனால் கிறிஸ்துமஸ் என்றதும் நமக்கு உடனடியாக மனதில் தோன்றுவது கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டாக்ளாஸ், அவர் தரும் பரிசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக்.
கிறிஸ்துமஸ் பண்டிகையும் கேக்கும்
குறிப்பாக கேக் இல்லாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நம்மால் நினைத்தும் பார்க்கமுடியாது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் கேக்குகளுக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் சுவாரஸ்யமானது.
பிராந்தி, ரம், விஸ்கி அல்லது செர்ரியில் ஊறவைக்கப்பட்ட திராட்சைகள், உலர் திராட்சைகள் ஆகியவற்றைக் கொண்டு பொதுவாக பாரம்பரிய ஆங்கிலேய வழக்க கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு plum porridge எனப்படும் பிளம் புட்டிங் தயாரித்து உண்ணும் பழக்கமே இருந்து வந்துள்ளது.
16ஆம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்துமஸூக்கு கேக் வெட்டும் பழக்கம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலேயர்களின் வழக்கப்படி கிறிஸ்துமஸ் கேக்குகள் பொதுவாக ரிப்பன் பேண்டுகள், பனி மனிதர்கள், ஃபிர் மரங்கள், ஐசிங் அடுக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. நம் ஊரில் ஓவன் இன்றி அனைவராலும் எளிமையாக செய்து உண்ணும் வகையிலான கேக் ரெசிப்பியை இங்கு காணலாம்.
ப்ளம் கேக் செய்வது எப்படி?
உலர்ந்த திராட்சை - 1/4 கப்
டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கப்,
பேரீட்சம்பழம் - 1/4 கப்,
கருப்பு திராட்சை - 1/4 கப்
இவற்றை ஒரு கப் திராட்சை ஜூஸில் ஊறவைக்கவும். இவற்றை 4 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும். (குறைந்தது 1 மணி நேரத்து ஊற வைக்கலாம்)
அரை கப் சர்க்கரை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 2 ஏலக்காய், 3 கிராம்பு, சிறிதளவு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, அரை டீஸ்பூர் சமையல் சோடா, அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, கோகோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், அரை கப் பொடித்த சர்க்கரை அனைத்தையும் சேர்த்து கலந்து சல்லித்து எடுத்துக் கொள்ளவும்.
சல்லித்தவற்றைக் கலந்துவிட்டு முக்கால் கப் உருக்கிய நெய் சேர்த்து கலந்துகொள்ளவும். அதனுடன் திராட்சையில் ஊறவைத்த உலர் பழங்கள், காய்ச்சி ஆறவைத்த பால் அரை கப் சேர்த்துக்கொள்ளவும்.
பாதாம் - 1/4 கப், பிஸ்தா - 1/4 கப், முந்திரி - 1/4 கப் இவற்றுடன் சிறிதளவு கோதுமை மாவு கலந்து ஏற்கனவே கிளறி வைத்த புட்டிங் உடன் சேர்த்துக் கொள்ளவும். படிப்படியாக மேலும் அரை கப் பால், சிறிதளவு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக்கொள்ளவும்.
குக்கரில் பொடி உப்பை சேர்த்து அதனை சூடாக விடவும். கேக் டின்னில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்துக் கொள்ளவும். அதன் மேல் மீண்டும் வெண்ணெய் தடவி முக்கால் கப் கேக் கலவை தடவி அதனை குக்கரில் வைத்து லோ ஃப்ளேமில் வேக விடவும்.
விசில், கேஸ்கட் இன்றி குக்கரை மூடி வைத்து 40 முதல் 50 நிமிடங்கள் லோ ஃப்ளேமில் கேக்கை வேக விடுங்கள். 50 நிமிடங்கள் கழித்து எடுத்து சுடச்சுட தட்டில் மாற்றி சுவையான கேக்கை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுங்கள்!