Health Tips: வெறும் வயிற்றில் டீ குடிப்பவர்களா நீங்கள்? - உடனே நிறுத்துங்க.. ஆபத்து அதிகம்!
தேநீரில் உள்ள காஃபின் மற்றும் டானின் வயிற்றில் அமிலங்களை அதிகரிக்கின்றன. வயிறு காலியாக இருக்கும்போது, இந்த அமிலம் வயிற்றின் உட்புறப் புறணியை நேரடியாக சேதப்படுத்துகிறது.

வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது செரிமான அமைப்பு மற்றும் உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
டீ, காபி இல்லாமல் நம்மில் பலருக்கும் ஒருநாள் விடியாது. 24 மணி நேரம் கடந்து செல்லாது. பால் இல்லாவிட்டால் கூட பரவாயில் கடும் டீ, கடும் காபி குடிக்கும் பழக்கம் கூட இருக்கும். சில நாள் ஒன்றுக்கு அதிகளவில் டீ, காபி குடித்து அதற்கு அடிமையாகி விடுவார்கள். இப்படியான நிலையில் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
அதாவது தேநீரில் உள்ள காஃபின் மற்றும் டானின் வயிற்றில் அமிலங்களை அதிகரிக்கின்றன. வயிறு காலியாக இருக்கும்போது, இந்த அமிலம் வயிற்றின் உட்புறப் புறணியை நேரடியாக சேதப்படுத்துகிறது. இதனால் வாயு, நெஞ்செரிச்சல், மார்பு வலி மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் உண்டாகிறது.
மேலும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்படுகீறது. அதன் தாக்கம் நாள் முழுவதும் எதிரொலிக்கிறது. உணவு ஜீரணமாகாமல் தாமதமாகிறது. இதனால் கனமாக உணர்வு உண்டாகிறது. மலச்சிக்கல், வாந்தி, வாயு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பழக்கம் மிகவும் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமல்லாமல் காஃபின் உட்கொள்வது உங்கள் இதயத் துடிப்பை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இது பயம், பதட்டம், எரிச்சல் மற்றும் கைகளில் நடுக்கம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் தேநீர் அருந்திய பின் பலரும் பதற்றமடைய தொடங்குகிறார்கள்.
இரவில் நீங்கள் தூங்கி காலையில் எழுந்தவுடன் உங்கள் உடல் நீரிழப்புடன் இருக்கும் என்பதை உணருங்கள். தேநீர் ஒரு டையூரிடிக் பானம் என்பதால் இது உடலில் இருக்கும் தண்ணீரை நீக்குகிறது. வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது மேலும் நம் உடலை நீரிழப்புக்கு ஆளாக்குகிறது. இது பலவீனம், சோர்வு, தலைவலியை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் பசி உணர்வு தாமதப்படுத்தப்படுகிறது. சரியான நேரத்தில் காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள். இதுநாள் முழுவதும் மந்தமாக இருக்க வைக்கிறது.
எனவே நீங்கள் எப்போது தேநீர், காபி குடிக்க விரும்பினாலும் அதற்கு ஒரு 5 நிமிடம் முன்பு நன்றாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்து விட்டு பின்னர் இந்த பானத்தை அருந்துங்கள். இதனால் நீரிழப்பு முற்றிலுமாக இழப்பது தவிர்க்கப்படும். தொடர்ச்சியாக டீ, காபி அருந்துவதால் அசௌகரியமான நிலையை உணர்ந்தால் உடனடியாக சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவர்களை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும்.





















