Plain Salna : சால்னா.. சால்னா.. இட்லி, சப்பாத்தி, பரோட்டா.. எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிட இந்த ரெசிப்பி ட்ரை பண்ணுங்க..
Plain Vegetable Salna : சுவையான சைவ கெட்டி சால்னா எப்படி செய்வதென்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்
முழு முந்திரி பருப்பு - 5, கசகசா - ஒரு டீஸ்பூன், சமையல் எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன், பட்டை - 2, பிரிஞ்சி இலை - 2, கிராம்பு - 4, ஏலக்காய் - 2, கல்பாசி - 3, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, உப்பு - தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் - அரை கப், சின்ன வெங்காயம் - 5, சோம்பு - ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - ஒரு ஸ்பூன், கறி மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன், புதினா மல்லி இலைகள் - ஒரு கைப்பிடி, தண்ணீர் – 100மிலி.
செய்முறை
முதலில் கசகசா மற்றும் முந்திரி பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு குக்கர் வைத்து, தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கல்பாசி, ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி, பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகுமளவுக்கு நன்றாக வதக்கி விடுங்கள்
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் கசகசா மற்றும் முந்திரியை தண்ணீரோடு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தோலுரித்த சின்ன வெங்காயம், சோம்பு சேர்த்து நைசாக, அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது குக்கரில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கறி மசாலாத்தூள் ஆகியவற்றை மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பச்சை வாசம் போனதும் ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ்ஷான கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
இலைகள் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை இதனுடன் சேர்க்க வேண்டும்.
இப்போது ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து மூடி போட்டு ஒரு விசில் மட்டும் விட்டு எடுத்துக்கொள்ளலாம்.
பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கரண்டியால் கலந்து விட்டு இறக்கினால் சுவையான கெட்டி சால்னா தயார். இதை இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.