பண்டிகை காலங்களில் சுவையான பலகாரம் செய்யணுமா? தேங்காய் பால் முறுக்கு செய்முறை பார்க்கலாம் வாங்க...
சுவையான தேங்காய் பால் முறுக்கு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
மொறு மொறு சுவையான முறுக்கு நம் எல்லோருக்குமே பிடிக்கும். இதில் தேங்காய்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். வாங்க சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 2 கப்
உளுந்து மாவு – அரை கப்
எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் – ஒன்ணே முக்கால் கப்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, எள்ளு, பெருங்காத்தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அனைத்தையும் மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.
பின் 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து மாவை கைகளால் நன்றாக பிசையவேண்டும். இப்போது கொஞ்சம், கொஞ்சமாக தேங்காய்ப்பால் ஊற்றி மாவை பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாவை முருக்கு அச்சில் சேர்த்து பிழியும் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்தால் சரியாக இருக்கும்.
முறுக்கு குழாயில் சிறிய துவாரம் உள்ள அச்சை போட்டு அதில் எண்ணெய் தடவவேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு குழாயில், சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பை பற்ற வைத்து கடாயில் முறுக்கை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், முறுக்கு குழாயை பயன்படுத்தி முறுக்கை தேவையான சைசில் பிழிந்து விட வேண்டும். எண்ணெயில் நேரடியாக பிழிந்து விட சிரமமாக இருந்தால், ஒரு சிறிய தட்டில் பிழிந்து அதை காய்ந்த எண்ணெயில் சேர்க்கலாம். ( தீயை மிதமாக வைத்து சமைத்தால் தான் முறுக்கு நன்றாக வரும். தீ அதிகமாக இருந்தால் முறுக்கு கருகி விட வாய்ப்புண்டு. )
இருபுறமும் பொன்னிறமாக முறுக்கை வறுத்து எடுக்க வேண்டும். குறைவான தீயில் முருக்கை இருபுறமும் திருப்பி விட்டு, மொறுமொறுவென வேகும் வரை காத்திருந்து எண்ணெயை வடிகட்டி விட்டு முறுக்கை எடுக்க வேண்டும்.
இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் ஒரு மாதம் வரை நமத்து போகாமல் இருக்கும். இந்த தேங்காய் பால் முறுக்கு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க