PAK vs BAN: கட்டாய வெற்றியுடன் களமிறங்கும் பாகிஸ்தான்.. தாக்குதலை தொடுக்குமா வங்கதேசம்..? இன்று மோதல்!
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
உலகக் கோப்பை 2023ல் இன்று (செவ்வாய்க்கிழமை - அக்டோபர் 31) பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹகிப் அல் ஹாசன் தலைமையிலான வங்கதேச அணியின் மோத இருக்கிறது. அரையிறுதிக்கான பந்தயத்தை கருத்தில் கொண்டு, இந்த போட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால், அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறி விடும்.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அணி வெற்றியுடன் திரும்ப முயற்சிக்கும். அதே நேரத்தில் நெதர்லாந்திடம் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தானிடம் பதிலடி கொடுக்க வங்கதேச அணியும் போராடும்.
பாகிஸ்தான் அணியில் மாற்றம் இருக்குமா..?
வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், ஆல்ரவுண்டர் முகமது நவாஸ், லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம். இந்த மூவருக்குப் பதிலாக ஹசன் அலி, ஃபகார் ஜமான், உசாமா மிர் ஆகியோர் அணிக்குள் நுழையலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷதாப் காயம் அடைந்தார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது கடினம்.
பிட்ச் எப்படி..?
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற பிட்ச். வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு பவுன்ஸ் ஏற்றி பேட்ஸ்மேன்களுக்கு தாக்குதலை தொடுக்கலாம். பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச முடிவு செய்யலாம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
விளையாடிய மொத்த போட்டிகள்: 38
பாகிஸ்தான் வென்ற போட்டிகள்: 33
வங்கதேசம் வென்ற போட்டிகள்: 5
போட்டிகள் சமநிலையில்: 0
முடிவு இல்லாத போட்டிகள்: 0
உலகக் கோப்பையில் எப்படி..?
ஒருநாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் இரண்டு முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 1999 உலகக் கோப்பையின் போது நார்தாம்ப்டனில் நடந்த குறைந்த ஸ்கோரின் ஆட்டத்தில் வங்கதேசம் அணி, பாகிஸ்தான் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2019-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடந்த 5 போட்டிகளின் நிலவரம்:
சமீபத்தில் லாகூரில் நடந்த ஆசிய கோப்பையின் போது இரு அணிகளும் மோதியது. இதில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்றில் வங்கதேச அணி வென்றுள்ளது. ஆனால் இந்த போட்டிகள் அனைத்தும் 2015 மற்றும் 2018 க்கு இடையில் விளையாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி: ஃபகார் ஜமான்/இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான்/உசாமா மிர், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம் மற்றும் ஹரிஸ் ரவுஃப்.
கணிக்கப்பட்ட வங்கதேச அணி: தஞ்சீத் ஹசன் ஷாகிப், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன் மிராஜ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஷோரிஃபுல் ரஹ்மான்