Health Tips: மன அழுத்தத்தால் அதிகமாக சாப்பிடுகிறீர்களா? இதை கவனிங்க!
மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் ஏற்படும் பசியின் காரணமாக, தேவையில்லா உணவுகள் உண்பது எடையை அதிகரிப்பதோடு உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகிறது..
ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது பசியானது அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இத்தகைய நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது என்பது நமது எடையை அதிகரிப்பதோடு உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகிறது. இத்தகைய மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் ஏற்படும் பசியான சந்தர்ப்பங்களில் சத்தான உணவுகளை சாப்பிட நம் உடலையும் மனதையும் பழக்கப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
மன அழுத்தத்தின்போது சாப்பிடும் உணவுகள்:
மன அழுத்தத்தில் இருக்கும்போது ஆரோக்கியமற்ற சர்க்கரைகள் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சோடியம் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை உண்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் உடம்பில் தேவையில்லா கொழுப்புகள் அதிகரித்து,உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது.உடல் பருமன் பிரச்சனை ஏற்படும் தருணத்தில், உடலின் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் வெகுவாக குறைந்து போய் விடுகிறது.ஆகவே மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் ஏற்படும் பசியின் காரணமாக, தேவையில்லா உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
மனித வாழ்வில், மன அழுத்தம் மற்றும் பதட்டம் எப்போது வரும் என்பதை கூற முடியாது. என்றாலும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மனச்சோர்வடையும் சமயங்களில், ஆரோக்கியமற்ற மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடாமல் இருக்கும் படி,உடலையும் மனதையும் செம்மைப்படுத்த முடியும் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.
சத்தில்லாத உணவுகளை படிப்படியாக நிறுத்துங்கள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பழக்கத்தை உடனடியாக கைவிடாதீர்கள், ஏனெனில் சிறிது காலத்திலேயே, அத்தகைய உணவு பழக்கம் திரும்பிவிடும். ஆகையால் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடும்போது, ஆரோக்கியமாற்ற ஜங் உணவுகள், சிப்ஸ்கள் மற்றும் நீண்ட காலமாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள், ஆகியவற்றை தவிர்த்திடுங்கள்.
பயறு வகைகள்,அவித்த தானியங்கள், கிழங்குகள் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற, காய்கறிகளை சாப்பிடும் பழக்கத்தை, கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வாருங்கள். பயணம் என்றாலே சந்தோஷமும், உற்சாகமும் நம்மை தொற்றிக் கொள்ளும். அத்தகைய தருணங்களில், நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளும்போது,எளிதாக அவை நம்மோடு இரண்டற கலந்துவிடும். ஆகவே உங்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்றுவதற்கு, பயணங்களை வசப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களை வசப்படுத்தும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிருங்கள்:
சிலருக்கு குறிப்பிட்ட உணவுகள் இருந்தே ஆக வேண்டும் என்ற பழக்கத்திற்கு அடிமையாய் இருப்பார்கள். இவர்கள் சிறிது சிறிதாக அந்த உணவின் அளவை குறைக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த உணவை, உணவு பட்டியலில் சேர்க்காமல் தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஒரு மூன்று மாத காலங்கள் ஒரு உணவை தவிர்த்தீர்களேயானால், உடலும் மனமும் அந்த உணவுகளை மறந்தே போகும். இப்படியாக நீங்கள் அடிமைப்பட்டு கிடக்கும் ஆரோக்கியம் மற்ற உணவிலிருந்து வெளியில் வாருங்கள்.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்:
அசைவத்தை காட்டிலும் புரதம் நிறைந்த கருப்பு சுண்டல் போன்ற தானிய வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.மேலும் தானிய வகைகளில் நார்ச்சத்து நிரம்பி இருப்பதினால், ஜீரண பிரச்சனைகளை சரி செய்து உடலை சிறப்பாக பேணி பாதுகாக்கும்.
இனிப்பை தவிர்த்திடுங்கள்:
பொதுவாக சாக்லேட் மற்றும் இனிப்புகளை குழந்தைகள் மட்டுமல்லாது,பெரியவர்களும் விரும்பி உண்பர். இத்தகைய சாக்லேட்டுகளும் அதில் கலக்கப்பட்டு இருக்கும் இனிப்பு மற்றும் காப்பின் போன்ற பொருட்கள், உங்கள் சுவை அரும்புகளை அடிமைப்படுத்தி, திரும்பத் திரும்ப சாப்பிடும் படியான ஒரு எண்ணத்தை தூண்டும். இத்தகைய தருணங்களில் பணவெல்லம் எனப்படும் பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றை சுவையுங்கள்.காலப்போக்கில் ஆரோக்கியமற்ற சாக்லேட்டுகளை தவிர்த்து, உடலுக்கு கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்களை தரும்,இத்தகைய உணவுக்கு,உங்கள் உடலும் மனமும் பழகிவிடும்.
ஆகையால்,மன அழுத்தம் நிறைந்த சமயங்களில்,அதிகமாக, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடாமல், உயிர்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளுக்கு,உங்கள் உடலையும் மனதையும் பழக்கப்படுத்துங்கள்.