Potato Paal Curry: உருளைக்கிழங்கு பால்கறி செய்வது எப்படி? பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்!
Potato Paal Curry: நாவில் எச்சில் உறவைக்கும் கல்யாண விருந்து உருளைக்கிழங்கு பால்கறி செய்வது எப்படி? என்று கீழே விரிவாக காணலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 200 கிராம், பச்சை பட்டாணி - 100 கிராம், பச்சை மிளகாய் - 4, முந்திரி -12, கசகசா - 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், உப்பு -தேவையான அளவு, பட்டை - 1, எண்ணெய் - 2 ஸ்பூன், கிராம்பு -2, தக்காளி - 1, வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை
உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை நன்கு கழுவி, அதை ஒரு குக்கரில் சேர்த்து, உருளைக்கிழங்கு பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து 3 விசில்கள் வரும் வரை வேகவிட வேண்டும்.
அரை மூடி தேங்காயை பிரவுன் பகுதியை சீவி எடுத்து விட்டு, துருவியோ அல்லது சிறு சிறு துண்டுகளாகவோ, நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் 2 பச்சை மிளகாய், கசகசா, முந்திரி, சோம்பு அனைத்தையும் மிக்சி ஜாரில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பை பற்ற வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் பட்டை, கிராம்பு சேர்த்து பொரிந்த பின், அதில் பொடியாக நறுக்கி பெரிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை, சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். பின் நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணியில் இருக்கும் தண்ணீரை வடித்து, தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை தோலுரித்து, மீடியமான துண்டுகளாக நறுக்கி, தாளித்த பொருட்களுடன் சேர்த்து கிளற வேண்டும்.
இவற்றை நன்றாக கிளறி விட்ட பிறகு, அரைத்த தேங்காய் விழுதையும் அதில் சேர்த்து, நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். இந்த கலவை கொதிக்க துவங்கியதும், சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். ஏற்கனவே உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது உப்பு சேர்த்து இருப்பதால், குறைந்த அளவு உப்பை சேர்க்க வேண்டும் . இந்தக் கலவை மிக கெட்டியாகி விட்டால், பட்டாணி வேகவைத்த தண்ணீரை சேர்க்கலாம்.
இது அதிக தண்ணீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்க கூடாது. மீடியமான அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். நன்கு கொதித்ததும் சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, கிரேவியை அடுப்பில் இருந்து இறக்கி மல்லித்தழை தூவ வேண்டும். ருசியான உருளைக்கிழங்கு, பட்டாணி பால் கறி சாப்பிட தயாராக உள்ளது. இதில் பட்டாணிக்கு பதில் பட்டர் பீன்ஸ் சேர்த்தால் இன்னும் சுவை வித்தியாசமாக இருக்கும்.
பூரி, சப்பாத்தி, ரொட்டி மற்றும் சாதம் ஆகிவற்றிற்கு இந்த உருளைக்கிழக்கு பால்கறி நல்ல சைடிஷ் ஆக இருக்கும்.