Lotus Makhana: நீரிழிவு நோய்க்கு தாமரை விதை நல்லதா! ஆச்சரியமளிக்கும் உண்மை… எப்படி சாப்பிடுவது?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். உங்களுக்கு பிடித்த, சுவையான உணவையே நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக உட்கொள்ள ஒரு சிறந்த ஆப்ஷன் உள்ளது. அதுதான் தாமரை விதை!
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஏகப்பட்டது இருக்கும். அந்த கடுமையான டயட்டை பின்பற்றுவது எளிதானது அல்ல. உங்களுக்கு பிடித்த, நாக்கிற்கு சுவையான அனைத்தையும் கைவிட வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படும் அல்லவா? அதுதான் இல்லை… உங்களுக்கு பிடித்த, சுவையான உணவையே நீரிழிவு நோயின் மருந்தாக உட்கொள்ள ஒரு சிறந்த ஆப்ஷன் உள்ளது. அதுதான் தாமரை விதை! பலர் அதனை முன்னரே சிறு வயதில் சாப்பிட்டு இருந்தாலும், அதில் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
தாமரை விதைகள்
இந்த தாமரை விதை, கார்போஹைட்ரேட்டுகளை நிறைய கொண்டுள்ளது மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது, அவற்றை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது. இவற்றில் கலோரிகளில் குறைவாக உள்ளது, ஆனால் போதுமான அளவு கால்சியம் மற்றும் புரதத்தை வழங்குகிறது. அவை வயிற்றை நிறைவாக உணர செய்வதால், பசியைக் குறைத்து, உடல் எடை குறைய உதவுகிறது. உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எடையை நிர்வகித்தல் என்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவும்.
சோடியம் குறைவு
மேலும் இதில் சோடியம் குறைவாக உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சோடியம் எடுத்துக்கொள்வதை குறைக்க அறிவுறுத்தப்படுவதால் இது அவர்களுக்கு சரியான உணவாக இருக்கும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலச் சிக்கல்களை சந்திக்க நேரிடும். தாமரை விதையில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன என்பதால், உங்களுக்கு தற்போது நீரிழிவு நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உணவில் தாமரை விதையை எவ்வாறு சேர்ப்பது:
- வறுத்த தாமரை விதை:
அதிகபட்ச நன்மைகளுக்காக தாமரை விதையை சாதாரணமாக சாப்பிடுவது சிறந்தது. இருப்பினும், சுவையாக வேண்டும் என்றால் வீட்டிலேயே வறுத்து சாப்பிடலாம். பேக்கேஜ் செய்யப்பட்ட சுவையூட்டப்பட்ட தாமரை விதையில் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிற கலவைகள் உள்ளன. எனவே, அவற்றை வீட்டில் செய்வது சிறந்தது. நீங்கள் அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து, சிறிது சீரக தூள், மிளகாய் தூள் போன்றவற்றைச் சேர்த்து சாப்பிடலாம்.
- தோசை மாவு செய்ய தாமரை விதையை பயன்படுத்தவும்:
தோசை மாவு அரிசி மற்றும் பருப்பில் மட்டுமே செய்ய முடியும் என்று யார் சொன்னது? வெவ்வேறு வகையான தோசை மாவு தயாரிக்க தாமரை விதையைப் பயன்படுத்தவும், இது உணவில் தாமரை விதையை சேர்க்க ஒரு தனித்துவமான வழியாகும். தாமரை விதையை ரவா உடன் சேர்த்து மென்மையான வெள்ளை மாவை உருவாக்கி தோசை மாவு செய்யலாம். அதன் தன்மையை மேம்படுத்த ஒரு சிறிய அளவு அவலும் சேர்க்கப்படுகிறது. சாம்பார் மற்றும் சட்னிகளுடன், இந்த தாமரை விதை தோசையை ருசிக்கலாம்.
- மில்க் ஷேக்குகளில் தாமரை விதையை சேர்க்கவும்
"தாமரை விதை மில்க் ஷேக்" என்று கேட்பதற்கே புதிதாக உள்ளது அல்லவா? இந்த ஊட்டச்சத்து நிறைந்த பானத்தை தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது உலர்ந்த வறுத்த தாமரை விதையை பால், பருப்புகள் மற்றும் உங்கள் விருப்பப்படி தேவையான விதைகளுடன் கலக்கவேண்டும். இதோடு ஓட்ஸ் அல்லது ஆப்பிள் போன்ற பழங்களையும் சேர்க்கலாம். மில்க் ஷேக்கை கொஞ்சம் இனிப்பாக்க சிறிது இயற்கைத் தேன், வெல்லம் அல்லது பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையிலிருந்து சற்று விலகியே இருங்கள்.