Instant Poha Idly: மாவு இல்லையா? இன்ஸ்டண்ட் அவல் இட்லியும், சூப்பர் சட்னியும் இப்படி செய்து அசத்துங்க!
இட்லி மாவு இல்லாத நேரத்தில் இன்ஸ்டண்ட் அவல் இட்லியும், அதற்கேற்ற சுவையான சட்னியும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 50 கிராம் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும். பின் இதில் 7 பல் பூண்டு, 8 பச்சை மிளகாய், ஒரு நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம், நறுக்கிய 4 தக்காளி சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 4 நிமிடம் வேக விடவும்.
இதற்கிடையே ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அளவு ரவை சேர்த்து அதில், அதே கப்பால் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
அதே கப்பால் ஒரு கப் அளவு அவல் எடுத்து வேறொரு கிண்ணத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 முறை அலசி தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவலை அளந்த அதே கப்பால் ஒரு கப் அளவு தயிர் எடுத்து அவலுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
வேக வைத்த வேர்கடலை நன்றாக வெந்து இருக்கும். இப்போது இதனுடன் நறுக்கிய 1 துண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் சீரகம், அரை எலுமிச்சைப் பழ அளவு புளி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதனுடன் கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது அவல் நன்றாக ஊறி வந்து இருக்கும். இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த அவல் மாவுடன் ஊற வைத்த ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது மாவு இட்லி மாவு பதத்திற்கு வந்து விடும். இப்போது இதனுடன் கரைத்த இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்ண்டும். இதை வழக்கம் போல் இட்லி தட்டில் இட்லியாக ஊற்றி வைக்க வேண்டும். வெந்ததும் இட்லியை எடுத்து விட வேண்டும்.
இப்போது வேக வைத்த வேர்க்கடலை வெங்காயம் தக்காளி உள்ளிட்டவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து அதில் இருக்கும் சிறிது தண்ணீரையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பின் வேக வைத்த தண்ணீரில் மீதம் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரை மிக்ஸி ஜாரில் சேர்த்து அலசி அரைத்த சட்னியில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் அதிகமாக சேர்த்துவிட கூடாது. இப்போது கடுகு கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் இன்ஸ்டண்ட் இட்லியும் சுவையான சட்னியும் தயார்.
இந்த இட்லி மற்றும் சட்னி ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்ததாக இருக்கும்.