Beef Chukka: நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பீப் சுக்கா: செய்வது எப்படி; டிப்ஸ் எடுத்துக்கோங்க!
சாப்பிடும்போது இன்னும் இன்னும் வேண்டும் என ஆசையை தூண்டும் விதமாக உணவை சமைக்க வேண்டும் என்ற எண்ணம் உணவை சமைக்கும் அனைவருக்கும் இருக்கும்.
பீப் அதாவது மாட்டுக்கறி என்பது இந்தியாவில் மிகவும் அதிகப்படியான மக்களால் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. மாட்டுக்கறியை வைத்து பலவகையான உணவுகளை தயார் செய்யலாம். அதில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் உணவு வகை பீப் சுக்கா. பீப் சுக்கா செய்வதற்கு பலவகையான செய்முறைகள் இருந்தாலும், சாப்பிடும்போது இன்னும் இன்னும் வேண்டும் என ஆசையை தூண்டும் விதமாக உணவை சமைக்க வேண்டும் என்ற எண்ணம் உணவை சமைக்கும் அனைவருக்கும் இருக்கும். அப்படியான பீப் சுக்காவை எப்படி தயார் செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பீப் சுக்கா மிகவும் சுவையாக வரவேண்டுமானால், சமைக்க பயன்படுத்தும் கறியின் தன்மை மிகவும் முக்கியம். அதாவது மிகவும் வயதான மாட்டின் கறி பீப் சுக்காவுக்கு பயன்படுத்தக்கூடாது. அதாவது மிகவும் இளம் வயது மாட்டின் தொடைப்பகுதி கறியை எலும்பு இல்லாமலும் கூடுமானவரை அதிகப்படியான கொழுப்பு இல்லாமலும் ஒரு கிலோ வாங்கிக்கொள்ளுங்கள். அதனை சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்துகொள்ள வேண்டும். அதில் மூன்று ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிசறிக்கொள்ளுங்கள். இதனை சுமார் மூன்று மணி நேரம் வெயிலில் உலர்த்த வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உலர்த்த வைக்கப்பட்டுள்ள கறியை புறட்டிப்போட வேண்டும்.
அதன்பின்னர், அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு போடவும், அதன் பின்னர், 250 கிராம் சின்ன வெங்காயத்திலேயே மிகவும் சிறிய அளவில் உள்ள வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து போட வேண்டும் (குறிப்பு: வெங்காயத்தை எக்காரணம் கொண்டும் கட் செய்யக்கூடாது). அதன் பின்னர், 20இல் இருந்து 25 காய்ந்த மிளகாயை வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வெந்த பின்னர் போட வேண்டும். இதனுடன் கறிவேப்பிலை போதுமான அளவு சேர்த்துக்கொள்ளலாம். முழுமையாக உள்ள பூண்டு, பெரிய பல் பூண்டு என்றால் ஒரு பூண்டும் சிறிய பல் பூண்டு என்றால் இரண்டு முழு பூண்டும் அதனுடன், 50 கிராம் அளவுடைய இஞ்சி, 20 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், மூன்று ஏலக்காய்(ஏலக்காய் சேர்ப்பதால் சுக்கா மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்) ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து, பாத்திரத்தில் உள்ள வெங்காயம் மிளகாய் வதங்கிய பின்னர் சேர்த்து கிளறி விடவும். இதன் பின்னர், ஒரு பெரிய சைஸ் தக்காளியை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு கிளறி விடவும். தக்காளி பாதி வதங்கியதும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் உள்ள தாளிப்பு நன்றாக வெந்த பின்னர், உலர்த்திய கறியை எடுத்து போட்டு கிளறி விடவும். முதல் 10 நிமிடத்துக்கு தண்ணீர் எதுவும் ஊற்றாமலும் அடி பிடிக்காமலும் கிளறி விடவும். அதன் பின்னர் 50 கிராம் கறிமசால் பொடி சேர்த்து கிளறி விட்டு, 750 மில்லி லிட்டர் அளவு தண்ணீர் சேர்க்கவும். இப்போது உப்பை மட்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு, தேவையானால் உப்பு சேர்த்து அதனை வேக வைக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியில் கறி நன்றாக வெந்து தண்ணீரின் அளவு குறைந்து விடும். தண்ணீர் குறைய குறைய அடிப்பிடிக்க துவங்கும். எனவே இறுது 5 நிமிடத்துக்கு கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது கொத்துமல்லி இலை சேர்த்து சுவையான பீப் சுக்காவை பரிமாறலாம். இடியாப்பம், புரோட்டா, சாப்பாடு போன்ற அனைத்து வகை உணவுகளுக்கும் சிறந்த சைட்-டிஷ்ஷாக பீப் சுக்கா இருக்கும்.