Food: காலைச் சிற்றுண்டியாக ஈஸியாக பனியாரம் செய்வது எப்படி..?
ஞாயிற்றுக்கிழமையில் வீடுகளில் குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து அளித்து அசத்துங்கள்.
சென்னையின் பானிபூரி சாட் கடைகளுக்கு நடுவே காலையில் சுடச்சுட சமைத்துத் தரப்படும் பனியாரத்துக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. பாரம்பரியமாக இது, புளித்த அரிசி மற்றும் உளுத்தம் பருப்பைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.பனியாரம் செய்வதற்கு என்று தனியே ஒரு சட்டி உண்டு, அதில் மட்டுமே பணியாரம் செய்யலாம். அல்லது வெறுமனே வானலியில் எண்ணெய் வைத்து பனியாரத்தை வறுத்து எடுக்கலாம்.
செய்வது எப்படி?
முதலில் அரிசி மற்றும் பருப்பு கலவையை தண்ணீரில் ஊறவைத்து, ஒரே இரவில் புளிக்க வைத்து மறுநாள் சமைக்க வேண்டும். பனியாரத்தை பற்றிய சுவாரசியமான விஷயங்களில் ஒன்று, இது ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவாகும். இதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் புளித்த மாவில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதனுடன் சில காய்கறிகளைச் சேர்த்தால், நல்ல ஆரோக்கியத்திற்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கும். பனியாரத்துக்கு மற்றவை போல அல்லாமல் மிகக் குறைந்த அளவே எண்ணெய் தேவைப்படுகிறது.
பனியாரத்தை வெறுமனே சாப்பிடவேண்டும் என இல்லாமல் துருவிய தேங்காய், நறுக்கிய பச்சை மிளகாய், அல்லது துண்டுகளாக நறுக்கப்பட்ட பனீர் போன்ற பல்வேறு பொருட்களை மாவில் சேர்த்து, ஒரு தனித்துவமான மற்றும் சுவையான பனியாரத்தை நாம் உருவாக்கலாம். இதனுடன் வெல்லம், ஏலக்காய், தேங்காய் சேர்த்து இனிப்பு பனியாரமாகவும் இதனைத் தயாரிக்கலாம்.
காலைச் சிற்றுண்டி:
இதற்கு நாம் கடையில் வாங்கும் தோசை அல்லது இட்லி மாவை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
இல்லை நீங்கள் மாவைக் கடையில் வாங்கப் பிரியப்படவில்லை என்றால், ஊறவைத்த அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு கலவையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து அடர்த்தியான பதத்தில் மாவை தயாரிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்து கொஞ்சம், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நீங்கள் புதிய கொத்துமல்லி இலைகளையும் சேர்க்கலாம். பிறகு பணியாரக் கல்லில் சிறிது எண்ணெய் தடவி, நன்றாக வேகும் வரை 10-15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
வேகவைத்ததைச் சரிபார்க்க குச்சி கொண்டு அதனைக் குத்தி பார்த்து மாவு அதில் ஒட்டாமல் வருகிறதா எனச் சோதிக்கலாம். பனியாரத்தை தக்காளி அல்லது வேர்க்கடலை சட்னியுடன் பரிமாறலாம். அல்லது கடைகளில் கிடைப்பது போன்ற ஸ்டைலில் காரச் சட்னியுடன் பரிமாறலாம். இது ஆரோக்கியமான மிருதுவான காலைச் சிற்றுண்டி உணவாகக் கருதப்படுகிறது. உங்களுக்கு காலையில் திடமாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை ஆனால் லைட்டாகச் சுவையாக ஏதேனும் உணவைச் சாப்பிடத் தோன்றினால் அதற்கு காரப் பனியாரம் சூப்பர் சாய்ஸ்.